https://x.com/sansad_tv
இந்தியா

திடீரென விபத்துக்குள்ளான போர் விமானம்: நொடிப் பொழுதில் உயிர் தப்பிய விமானி!

இதேபோல கடந்த செப்.2-ல் பாகிஸ்தானை ஒட்டியுள்ள ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் மிக்.29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது.

ராம் அப்பண்ணசாமி

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று ஆக்ராவுக்கு அருகே இன்று (நவ.4) மாலை விபத்துக்குள்ளானது.

இன்று மாலை இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்.29 ரக போர் விமானம் ஒன்று பயிற்சிக்காக பஞ்சாபின் ஆதம்பூரில் கிளம்பி, ஆக்ராவின் விமானப்படை தளம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஆக்ரா அருகே அந்தப் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு,

`இந்திய விமானப்படையின் மிக்-29 ரக போர்விமானம் இன்று வழக்கமான பயிற்சியின்போது ஆக்ரா அருகே தொழில்நுட்பக் கோளாறால் விழுந்து நொறுங்கியது. விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறும் முன்பு விமானத்தால் தரையில் உயிர் மற்றும் உடைமைகளுக்கு சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் விமானி. விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது இந்திய விமானப்படை’.

கடந்த 2 மாதங்களில் இது இரண்டாவது நிகழ்வாகும். இதேபோல கடந்த செப்.2-ல் பாகிஸ்தானை ஒட்டியுள்ள ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் மிக்.29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்ட எக்ஸ் சமூக வலைதளப் பதிவு பின்வருமாறு,

`பார்மர் பகுதியில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் இரவு நேர பயிற்சியின்போது, மிக்.29 ரக போர்விமானத்தில் சிக்கலான தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து உடனடியாக விமானி வெளியேறினார். விமானி பாதுகாப்பாக உள்ளார், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’.