ANI
ANI
இந்தியா

சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்பு!

கிழக்கு நியூஸ்

நன்கொடையாளரும், எழுத்தாளருமான சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சுதா மூர்த்தியை கடந்த 8-ம் தேதி நியமன எம்.பி.யாக நியமித்தார்.

இவர் நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்ட போது குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இருந்தார்கள். சுதா மூர்த்தியின் கணவரும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான என்.ஆர். நாராயண மூர்த்தியும் உடனிருந்தார்.

ஆங்கிலம் மற்றும் கன்னட இலக்கியங்களில் நிறைய பங்களிப்பை ஆற்றியுள்ள சுதா மூர்த்தி, 2021 டிசம்பரில் இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். 2023-ல் சமூகப் பணியில் இவரது பங்களிப்புக்காக பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 2006-ல் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

சுதா மூர்த்தி நியமன எம்.பி. நியமிக்கப்பட்டபோது, பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்தி பதிவிட்டதாவது:

"குடியரசுத் தலைவர், சுதா மூர்த்தியை மாநிலங்களவைக்குப் பரிந்துரைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சமூகப் பணி, நன்கொடை மற்றும் கல்வியில் இவரது பங்களிப்பு மகத்தானது. மாநிலங்களவையில் இவருடைய இருப்பு என்பது, பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான ஒரு வலிமையான சான்று. நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பெண்களினுடைய திறன் மற்றும் வலிமைக்கான ஓர் எடுத்துக்காட்டு இது" என்று அவர் பதிவிட்டிருந்தார்.