ANI
இந்தியா

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைப்பு

சென்னையில் ரூ. 102.63-க்கு விற்பனையாகி வந்த ஒரு லிட்டர் பெட்ரோல், நாளை முதல் ரூ. 100.75-க்கு விற்பனையாகும்.

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய பெட்ரோல், டீசல் விலையானது வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்திப் சிங் புரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"மார்ச் 14, 2024 நிலவரப்படி, இந்தியாவில் பெட்ரோல் விலை சராசரியாக லிட்டர் 94 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதுவே இத்தாலியில் ரூ. 168.01. இந்தியாவைவிட 79 சதவீதம் அதிக விலைக்கு விற்பனையாகிறது. பிரான்ஸில் 78 சதவீதம் அதிகமாக 166.87 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஜெர்மனியில் 70 சதவீதம் அதிகமாக 159.57 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஸ்பெயினில் 54 சதவீதம் அதிகமாக ரூ. 145.13-க்கு விற்கப்படுகிறது."

விலை குறைப்பால் சென்னையில் ரூ. 102.63-க்கு விற்பனையாகி வந்த ஒரு லிட்டர் பெட்ரோல், நாளை முதல் ரூ. 100.75-க்கு விற்பனையாகும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது. சென்னையில் ரூ.94.24-க்கு விற்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் டீசல், நாளை முதல் ரூ. 92.34-க்கு விற்பனையாகவுள்ளது.