ANI
இந்தியா

எழுத்தாளர் அருந்ததி ராய் மீது நடவடிக்கை: தில்லி துணைநிலை ஆளுநர் ஒப்புதல்!

ராம் அப்பண்ணசாமி

கடந்த வெள்ளிக்கிழமை தில்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சாக்ஸேனா எழுத்தாளர் அருந்ததி ராய் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இது குறித்து தில்லி துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், `அருந்ததி ராய் மற்றும் காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷௌகத் ஹூசைன் ஆகியோர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் உட்பிரிவு 45(1)-ன் கீழ் நடவடிக்கை எடுக்க தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சாக்ஸேனா ஒப்புதல் அளித்துள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010-ல் தில்லியில் நடந்த `விடுதலை: ஒரே வழி’ கருத்தரங்கில் பேசிய இவர்கள் இருவரும், `காஷ்மீர் பகுதியை இந்தியாவிலிருந்து பிரிக்கக் கோரி பரப்புரையில் ஈடுபட்டனர்’ என செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம், இவர்கள் இருவர் மீதும் `குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்’ உட்பிரிவு 196-ன் கீழ் நடவடிக்கை எடுக்க தில்லி துணைநிலை ஆளுநர் சாக்ஸேனா ஒப்புதல் அளித்திருந்தார்.

பேச்சு அல்லது எழுத்து மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிராகச் செயல்படுபவர்கள் மீது `சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்’ கீழ் காவல்துறையினரால் வழக்கு பதியப்படும். மேலும் இந்தச் சட்டத்தின் கீழ் தீவிரவாத இயக்கங்களைத் தடை செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும்.

எழுத்தாளர் அருந்ததி ராய் 1997-ல் `சின்ன விஷயங்களின் கடவுள்’ என்ற புத்தகத்துக்காக புக்கர் பரிசை வென்றுள்ளார்.