கோப்புப்படம் 
இந்தியா

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிலர் தொடர்பில் உள்ளார்கள்: ராகுல் காந்தி

கிழக்கு நியூஸ்

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், அங்குள்ள சிலர் தங்களுடன் தொடர்பிலிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக ஃபைனான்சியல் டைம்ஸுக்கு நேர்காணல் கொடுத்துள்ளார்.

இந்த நேர்காணலில் ராகுல் காந்தி கூறியதாவது:

"இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. எளிதில் முறிவை உண்டாக்கக் கூடிய அளவுக்குதான் மக்களவைத் தேர்தல் முடிவுகள் எண்ணிக்கை அமைந்துள்ளது. ஒரு சிறிய சலசலப்பு அரசைக் கவிழ்த்துவிடும். ஒரு கூட்டணிக் கட்சி அணி மாறினாலே போதுமானது என்ற அளவில்தான் இருக்கிறது.

மோடி அணியில் பெரிதளவில் அதிருப்தி இருக்கிறது. அங்குள்ள (தேசிய ஜனநாயகக் கூட்டணி) சிலர் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.

வெறுப்புணர்வைப் பரப்பி அதிலிருந்து பலனடையும் சிந்தனையை இந்திய மக்கள் இந்தத் தேர்தலில் நிராகரித்துள்ளார்கள். இந்தக் கூட்டணி தடுமாறும் என்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஏனென்றால், 2014 மற்றும் 2019-ல் நரேந்திர மோடிக்கு எது கைகொடுத்ததோ, அது தற்போது கைகொடுக்கவில்லை.

மோடி எனும் சிந்தனையும், பிம்பமும் தகர்க்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அயோத்தி குறித்து பேசி வந்த ஒரு கட்சி அயோத்தியிலேயே தோல்வியைச் சந்தித்துள்ளது. மத வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜகவின் அடிப்படையே சீர்குலைந்துள்ளது" என்றார் ராகுல் காந்தி.

மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து 240 இடங்களிலும், காங்கிரஸ் தனித்து 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், இண்டியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.