படம்: https://twitter.com/kharge 
இந்தியா

மக்கள் தங்களுடைய தவறுக்கு வருந்துகிறார்கள்: மல்லிகார்ஜுன கார்கே

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் கர்நாடக மாநிலம் கல்புர்கியில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வாக்களித்தார். இவரது மகன் பிரியங்க் கார்கேவும் தனது வாக்கை செலுத்தினார்.

வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

"அனைத்துத் தொழிலதிபர்கள் மற்றும் ஏழை மக்கள் ஒன்றிணைந்து இந்த முறை காங்கிரஸை வெற்றி பெறச் செய்வார்கள். கடந்த முறை செய்த தவறுக்கு மக்கள் வருந்துகிறார்கள். இந்த முறை அதிக பெரும்பான்மையுடன் காங்கிரஸைத் தேர்வு செய்யவுள்ளார்கள்" என்றார்.

கல்புர்கியில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தோதாமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் உமேஷ் ஜாதவ் போட்டியிடுகிறார். பகல் 1 மணி நிலவரப்படி கர்நாடகத்தில் 41.59% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி நிலவரப்படி 93 தொகுதிகளில் 39.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.