ஷிகர் தவான் (கோப்புப்படம்) 
இந்தியா

ஷிகர் தவானுக்கு ரூ. 5.7 கோடியை வட்டியுடன் தர வேண்டும்: முன்னாள் மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு | Shikhar Dhawan |

அயர்லாந்தைச் சேர்ந்த தன் காதலி சோபி ஷைனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் ஷிகர் தவான்...

கிழக்கு நியூஸ்

இந்தியக் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானின் முன்னாள் மனைவியிடம் உள்ள ரூ. 5.72 கோடியைத் திருப்பித் தர வேண்டும் என்று தில்லி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான ஷிகர் தவான். இவர் கடந்த 2012-ல் ஆயிஷா முகர்ஜி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜோராவர் என்ற மகன் உள்ளார்.

ஆயிஷாவுடன் விவாகரத்து

ஆனால். திருமணமான சில ஆண்டுகளிலேயே ஆயிஷா முகர்ஜி தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும், மிரட்டுவதாகவும், தனது சொத்துகள் அனைத்திலும் பெயர்களை இணைக்கச் சொல்லி வற்புறுத்துவதாகவும் ஷிகர் தவான் குற்றம்சாட்டினார். இதனால் விவாகரத்து கோரி தில்லி குடும்ப நல நீதிமன்றத்தில் ஷிகர் தவான் மனு அளித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிஷ்குமார், இருவருக்கும் 2023 அக்டோபர் 4 அன்று விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார்.

சொத்து பகிர்வு தீர்ப்புகள்

அதன்பிறகு ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற ஆயிஷா முகர்ஜி, ஷிகர் தவானின் உலகளாவிய சொத்துகளில் ஆஸ்திரேலிய சட்டப்படை 60% சொத்துகளைக் கோரி வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த ஆஸ்திரேலிய குடும்ப நல நீதிமன்றம், 2021 முதல் 2024 வரை ஷிகர் தவானின் சொத்துப் பகிர்வு தொடர்பான பல்வேறு ஆணைகளை இட்டது. இவற்றை எதிர்த்து தில்லி குடும்ப நல நீதிமன்றத்தில் ஷிகர் தவான் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். இதனை நீதிபதி தேவேந்தர் குமார் கார்க் விசாரித்தார்.

முன்னாள் மனைவிக்கு உத்தரவு

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஷிகர் தவானின் முன்னாள் மனைவி அவரைத் துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையிலேதான் விவகாரத்து வழங்கப்பட்டது சுட்டிக் காட்டப்பட்டது. அதன்பின் ஆஸ்திரேலிய குடும்ப நீதிமன்றம் விதித்த உத்தரவுகள் இந்தியாவுக்குள் செல்லுபடி ஆகாது என்று கூறிய நீதிபதி, தவானின் முன்னாள் மனைவி அவருக்கு இழப்பீடாக ரூ. 5.7 கோடியை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், தவான் வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து ஆண்டுக்கு 9% வட்டியுடன் அந்தத் தொகையை ஆயிஷா முகர்ஜி செலுத்த வேண்டும் என்றும், இதற்கு எதிராக ஆயிஷா முகர்ஜி வழக்கு பதிவு செய்ய அனுமதி மறுத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புது மண வாழ்வில் ஷிகர் தவான்

சமீபத்தில் ஷிகர் தவான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அயர்லாந்தைச் சேர்ந்த சோபி ஷைன் என்பவரைக் காதலித்து வந்த ஷிகர் தவான், கடந்த பிப்ரவரி 21 அன்று அவரை திருமணம் செய்து கொண்டார். ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வரும் சோபியை, தவான் காதலித்து வந்தார். கடந்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இருவரும் ஒன்றாக இணைந்து போட்டியைப் பார்த்தது கவனம் பெற்றது. புதிய மணவாழ்க்கைக்குள் நுழைந்துள்ள ஷிகர் தவானுக்கு தில்லி குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

Patiala House court ordered the return of Rs 5.72 crore from the ex-wife of cricketer Shikhar Dhawan.