டாபர் சவன்பிராஷை குறிவைத்துத் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிடுவதற்கு, பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு தில்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தங்கள் நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்றைப் பற்றி பதஞ்சலி நிறுவனம் இழிவான விளம்பரங்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டு டாபர் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நீதிபதி மினி புஷ்கர்ணா இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்தார்.
சவன்பிராஷ் என்பது மூலிகைகள் கலந்து ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படும் ஒரு வகையான லேகியமாகும். இதை உட்கொண்டால் நோய் பாதிப்புகள் ஏற்படாது என்று கூறப்படுகிறது. `டாபர் சவன்பிராஷ்’ என்ற பெயரில், டாபர் நிறுவனம் நீண்ட காலமாக இந்த லேகியத்தை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், ராம்தேவ் பாபாவின் பதஞ்சலி நிறுவனமும் சவன்பிராஷை தயாரித்து விற்பனை செய்கிறது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் ஒன்றில், ஆயுர்வேத வேதங்கள் மற்றும் பாரம்பரிய நூல்களின்படி சவன்பிராஷை தயாரித்த ஒரே நிறுவனம் தங்களுடையதுதான் என்றும், (டாபர் போன்ற) பிற நிறுவனங்களுக்கு இது குறித்த போதிய அறிவு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விளம்பரங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்கக்கோரி, தில்லி உயர் நீதிமன்றத்தை டாபர் நிறுவனம் அணுகியதுடன், தங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக ரூ. 2 கோடி இழப்பீடு கோரியது.
பதஞ்சலியின் சவன்பிராஷ் மட்டுமே உண்மையான தயாரிப்பு என்று அந்நிறுவனத்தின் விளம்பரம் தவறாகக் கூறியுள்ளதாக டாபரின் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இதுபோன்ற விளம்பரங்கள் நுகர்வோரை தவறாக வழிநடத்தக் கூடியது என்றும், கடுமையான ஒழுங்குமுறை தரங்களால் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையைக் குறைமதிப்பிடும் செயல் என்றும் டாபரின் மனுவில் வாதிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சவன்பிராஷ் குறித்த பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை வெளியிட தடை பிறப்பித்த தில்லி உயர் நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 14-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.