https://www.instagram.com/madmax_fluffyroad/
இந்தியா

செல்லப் பிராணிகளை பயணத்தில் அழைத்துச் செல்லும் இந்திய ரயில்வே திட்டம்: பயணிகள் வரவேற்பு!

ரயில்களின் ஏ.சி. முதல் வகுப்பு பெட்டிகளில் மட்டுமே செல்லப் பிராணிகளை உடன் அழைத்துச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

செல்லப் பிராணிகளை வளர்க்கும் நபர்கள், ரயில் பயணங்களின்போது தங்களுடன் அவற்றை அழைத்தும் செல்லும் வகையில் இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் செல்லப் பிராணிகளான நாய்களையும், பூனைகளையும் ரயில் பயணத்தில் உடன் அழைத்துச் செல்வதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாக முன்பதிவு செய்வது அவசியம். ரயில்களின் ஏ.சி. முதல் வகுப்பு பெட்டிகளில் மட்டுமே செல்லப் பிராணிகளை உடன் அழைத்துச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்த பயணிகள், ரயில் கிளம்பும் நேரத்திற்கு 3 மணி நேரம் முன்பே தங்களின் செல்லப்பிராணிகளை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது ரயில் நிலைய அதிகாரிகளிடம் தங்களின் செல்லப்பிராணிகளுக்கு செலுத்தப்பட்ட அனைத்து தடுப்பூசிகளின் சான்றிதழ்களையும் அவர்கள் காண்பிப்பது அவசியம்.

கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட இந்த வசதியை இதுவரை 700-க்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தியுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதே நேரம் செல்லப் பிராணிகளை அவற்றுக்கான பெட்டிகளில் வைத்து ரயிலில் கொண்டு செல்லும் வகையிலான திட்டம் மத்திய ரயில்வே அமைச்சகத்தின் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக இந்தியாவில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மிகவும் குறிப்பாக, கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஊரகப் பகுதிகளைவிட நகரங்களில் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வருடத்திற்கு சுமார் 13.9 சதவீதம் அளவுக்கு இந்த வளர்ச்சி இருப்பதாக இந்தியா சர்வதேச செல்லப் பிராணிகளுக்கான வர்த்தக கண்காட்சியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.