நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.
நவம்பர் 26 அன்று அரசியலமைப்புச் சட்ட நாள் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டு விழா பழைய நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் கொண்டாடப்படும் என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு நாள்களில் கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல்களுக்குப் பிறகும் முதன்முறையாகக் கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது.
இந்தக் கூட்டத்தொடரில் வக்பு வாரிய சட்டத்திருத்தம் மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் மிகப் பெரிய அளவில் பேசுபொருளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வக்பு வாரிய சட்டத்திருத்தம் தற்போது நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன் உள்ளது. இதுதொடர்புடைய ஆய்வறிக்கையை நாடாளுமன்றக் கூட்டுக் குழு நவம்பர் 29 அன்று தாக்கல் செய்கிறது.
இந்தக் கூட்டத்தொடருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு உள்பட பல்வேறு விவகாரங்கள் அப்போது விவாதிக்கப்பட்டன.