ANI
இந்தியா

தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்கவேண்டும்: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தை நடைமுறைப்படுத்த 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

ராம் அப்பண்ணசாமி

தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதியை மத்திய கல்வி அமைச்சகம் விடுவிக்கவேண்டும் என்று கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை வழியாக பரிந்துரைத்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றான மும்மொழிக்கொள்கை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவு வருகிறது. குறிப்பாக, மும்மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்தாததால், தமிழகத்திற்குச் சேரவேண்டிய ரூ. 2,152 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், 2025-26 மத்திய பட்ஜெட்டின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறைக்கான மானியக் கோரிக்கை தொடர்பாக நேற்று (மார்ச் 26) காங்கிரஸ் எம்.பி,. திக்விஜய் சிங் தலைமையிலான கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை வெளியிட்டது.

மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தை நடைமுறைப்படுத்த 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒப்புதல் தெரிவித்ததாகவும், கேரளம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்கள் மட்டும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்புதலை தெரிவிக்கவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், இதனால் கேரளத்திற்கு ரூ. 859.63 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ. 1,000 கோடிக்கு மேலாகவும், தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடியும் நிலுவையில் இருப்பதாகவும், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது, ஆசிரியர் பயிற்சி திட்டங்களை செயல்படுத்துவது, பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்ற பணிகள் பாதிக்காமல் இருக்க சம்மந்தப்பட்ட மாநில அரசுகளுடன் கலந்து பேசி, மத்திய அரசு விரைவில் நிதியை விடுவிக்கவேண்டும் என்று அறிக்கையில் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.