நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று (ஜூலை 25), காலை 11 மணி அளவில் மக்களவை கூடியதும், முந்தைய நாள்களைப்போலவே பிஹார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்திவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இதனால், பிற்பகல் 2 மணி வரை மக்களவையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்து, அவை நடவடிக்கையை ஒத்திவைத்தார். இதைத் தொடர்ந்து அவையின் மாண்பை மீட்டெடுக்கவும், அவை சுமூகமாக செயல்படுவதை உறுதி செய்யவும், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்தார்.
இதில், காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கௌரவ் கோகாய், திமுக சார்பில் எம்.பி. கலாநிதி வீராசாமி, தேசியவாத காங்கிரஸ் (சரத்) கட்சி எம்.பி. சுப்ரியா சுலே, சமாஜ்வாதி, சிவசேனா (உத்தவ்) கட்சிகளின் மக்களவை எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நம்பகத்தகுந்த மக்களவை வட்டாரங்களில் அளித்த தகவல்களின்படி, எதிர்க்கட்சிகளுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டத்தின்போது வரும் திங்கள்கிழமை (ஜூலை 28) முதல் அவை நடவடிக்கைகளை சீராகவும், திட்டமிட்டபடியும் நடத்த உடன்பாடு எட்டப்பட்டதாக இந்தியா டுடே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மக்களவையின் இன்றைய (ஜூலை 25) நடைவடிக்கைகள் குறித்து வெளியான நிகழ்ச்சி நிரலில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் ஒரு சட்டப்பூர்வ தீர்மானத்தை முன்மொழிவார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பிரச்னை குறித்து விவாதிக்க பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அலுவல்களை நிறுத்தி வைக்கக்கோரி ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளனர்.