இந்தியா

நாடாளுமன்றப் பாதுகாப்பு மீறல் வழக்கு: நீலம் ஆசாத் நீதிமன்றத்தில் கோரிக்கை

கிழக்கு நியூஸ்

நாடாளுமன்றப் பாதுகாப்பு மீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீலம் ஆசாத், வெள்ளிக்கிழமை அன்று தனக்கு முதுகுவலி இருப்பதாகவும், ஆனால் சிறையில் தனக்கு மருந்து வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரும் வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரும் தங்கள் வழக்கறிஞர்களை மாற்றியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரு தனியார் வழக்கறிஞர் வாதிடுவார்.

விசாரணைக்குப் பிறகு, கூடுதல் அமர்வு நீதிபதி டாக்டர் ஹர்தீப் கெளர் இந்த விவகாரத்தை மார்ச் 11 அன்று மேலதிக விசாரணைக்குப் பட்டியலிட்டார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் நீதிமன்றக் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நபர்களுக்கும் வழக்கறிஞர் சோமார்ஜுனா வாதிடவுள்ளார். முன்பு, அவர்களுக்கு நீதிமன்றத்தால் சட்ட உதவி ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் கதறி அழுத நீலம் ஆசாத், தனது வழக்கறிஞரை மாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார். கடந்த 20 நாட்களாக முதுகுவலியால் அவதிப்படுவதாகவும், அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜனவரி 31 அன்று, குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொரு நபரும் காவலின் போது ஒவ்வொரு பக்கத்திலும் வெவ்வேறு இடங்களில் சுமார் எழுபது வெற்றுப் பக்கங்களில் கையெழுத்திட கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு, அவர்கள் கையெழுத்திட மின்சார அதிர்ச்சிக் கொடுக்கப்பட்டது என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்குமாறு தில்லி காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட நீலம் ஆசாத், நேற்று முன்தினம் ஒரு பெண் அதிகாரி 52 வெற்று ஆவணங்களில் வலுக்கட்டாயமாகக் கையெழுத்திட கட்டாயப்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் சுரேஷ் செளத்ரி குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த நீதிமன்றம், தகுந்த மனுவை தாக்கல் செய்யுமாறு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியது. அதன்படி, நீலம் ஆசாத்தின் வழக்கறிஞர் மனுவைத் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குறிப்பிட்ட வழக்கு, டிசம்பர் 13 அன்று பாராளுமன்றத் தாக்குதலின் ஆண்டு நிறைவில் ஏற்பட்ட பாதுகாப்பு மீறலை முன்வைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.