ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வத்ரா, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடி, பாதுகாப்பு குறைபாடுகள் குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
குறிப்பாக, பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள் என்பது தெரிந்திருந்தும், அங்கு எந்த பாதுகாப்பு வீரரும் இல்லாதது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதம் மக்களவையில் நேற்று (ஜூலை 28) தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக இன்று (ஜூலை 29) மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது,
`இந்த அரசாங்கத்தை நம்பி மக்கள் பஹல்காமுக்கு சென்றனர், ஆனால் அரசாங்கம் அவர்களை கடவுளின் கருணையில் விட்டுவிட்டது. ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பைசரன் பள்ளத்தாக்குக்குச் சென்றது அரசாங்கத்திற்குத் தெரியாதா? ஏன் (அங்கே) பாதுகாப்பு இல்லை? எதனால் அவர்கள் கடவுளின் கருணையில் விடப்பட்டனர்?
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரின் பொறுப்பல்லவா?’ என்றார்.
பஹல்காம் தாக்குதலை அரசாங்கத்தின் தோல்வி என்று சுட்டிக்காட்டி, பிரியங்கா காந்தி பேசியதாவது,
`இவ்வளவு கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நடக்கப்போகிறது என்றும் பாகிஸ்தானில் ஒரு சதித்திட்டம் தீட்டப்படுகிறது என்றும் எந்த அரசு நிறுவனத்திற்கும் தெரியாதா? இது நமது அரசாங்கம், உளவுத்துறை அமைப்புகளின் மிகப்பெரிய தோல்வி, இதற்கு யார் பொறுப்பேற்பது? யாராவது ராஜினாமா செய்தார்களா?’ என்றார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து அரசாங்கம் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசும் நேரத்தில், தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்த பதில்களைத் தவிர்ப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
`ஆளும் கட்சியினர் பல்வேறு அம்சங்களைப் பற்றிப் பேசினார்கள், ஆனால் எதனால், எவ்வாறு பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தது என்பதற்கு பதிலளிக்கவில்லை’ என்றார்.