இந்தியா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது: பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

ஒவ்வொரு வருடமும் பொருளாதார ஆய்வறிக்கை இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதலுடன் தயாரிக்கப்படும்

ராம் அப்பண்ணசாமி

18-வது மக்களவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 22) தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக கடந்த நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து மக்களவையில் நாளை (ஜூலை 23) அவர் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். தொடர்ந்து ஏழாவது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது மூலம் மத்திய பட்ஜெட்டை அதிக முறை தாக்கல் செய்த இந்திய நிதியமைச்சர் என்ற பெருமையைப் பெற இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

இந்த வருடம் 18-வது மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்த காரணத்தால், கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியாகி கூட்டணிக்கட்சிகள் ஆதரவுடன் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றார். அவரது மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் இன்று பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார்.

ஒவ்வொரு வருடமும் மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருந்தது என்ற தகவல்கள் பொருளாதார ஆய்வறிக்கையில் இடம் பெற்றிருக்கும்.

ஒவ்வொரு வருடமும் இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதலுடன் தயாரிக்கப்படும். இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் தற்போது பதவி வகிக்கிறார்.

இன்று தொடங்கும் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 வரை நடைபெற இருக்கிறது.