இந்தியா

தேதி குறிப்பிடாமல் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், 2 பாஜக எம்.பி.க்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.

ராம் அப்பண்ணசாமி

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் மக்களவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா, இதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த டிச.17-ல் பேசியது பெரும் சர்ச்சையானது. இதைக் கண்டித்து நேற்று நீல நிற உடைகளை அணிந்து வந்த இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே அமித் ஷா ராஜினாமா செய்யக்கோரி கோஷமிட்டனர்.

இதற்குப் போட்டியாக பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்ற நுழைவாயிலில் நின்றபடி, அம்பேக்தரை அவமதித்த காங்கிரஸ் கட்சியைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கீழே விழுந்து காயமடைந்த 2 பாஜக எம்.பி.க்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் பாஜக எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், பன்சூரி ஸ்வராஜ் ஆகியோர் புகாரளித்தனர். இதனை தொடர்ந்து, அதே காவல் நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை பாஜக எம்.பி.க்கள் கீழே தள்ளிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் மக்களவையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. இதனை அடுத்து நண்பகல் 12.09 மணிக்கு தேதி குறிப்பிடாமல் மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டது.