அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், பிற்பகம் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக கடந்த மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளில் அமெரிக்க அரசு இறங்கியது.
முதற்கட்டமாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களை ஏற்றிக்கொண்டு, அமெரிக்க இராணுவத்தின் சி-17 ரக விமானம் நேற்று (பிப்.5) பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் விமான நிலையத்தை வந்தடைந்தது.
அதேநேரம், அமெரிக்க ராணுவ விமானத்தில் கைகள் மற்றும் கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் இந்தியர்கள் அழைத்து வரப்பட்ட காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையானது. நாடு கடத்தும் நபர்களை மிக மோசமான முறையில் அமெரிக்க அரசு கையாண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து நூற்றுக்கும் அதிகமான இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று (பிப்.6) விவாதிக்கக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து இன்று காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை கூடியதும், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடுமையான முறையில் அமளியில் ஈடுபட்டார்கள்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரினார்கள். இதனை அடுத்து நண்பகல் 12 வரை மக்களவையும், மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டன.
12 மணிக்கு மீண்டும் இரு அவைகளும் கூடியதும், இதே விவகாரத்தை முன்வைத்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டார்கள். எனவே பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் மக்களவை கூடியதும், இந்த விவகாரத்திற்கான உரிய விளக்கத்தை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அளிப்பார் என்று கூறப்படுகிறது.