லடாக்கில் கைது செய்யப்பட்ட காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்குக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக லடாக் டிஜிபி எஸ்டி சிங் ஜாம்வால் தெரிவித்துள்ளார்.
யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரியும் 6-வது அட்டவணையின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதை வலியுறுத்தி காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் செப்டம்பர் 10 முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
செப்டம்பர் 24 அன்று லடாக் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, இதில் 4 பேர் உயிரிழந்தார்கள். 80 பேர் காயமடைந்தார்கள்.பாஜக அலுவலகம் மற்றும் வாகனங்கள் சிலவற்றுக்குத் தீ வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிடுவதாக சோனம் வாங்சுக் அறிவித்தார். வெள்ளியன்று லடாக் காவல் துறையினர் சோனம் வாங்சுக்கைக் கைது செய்தார்கள். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், லடாக் டிஜிபி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.
"அண்மையில், பாகிஸ்தான் உளவு அதிகாரி ஒருவரைக் கைது செய்தோம். இவர் பாகிஸ்தானுக்குத் தகவல்களைக் கொடுத்து வந்துள்ளார். இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. சோனம் வாங்சுக் பாகிஸ்தான் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்தார். வங்கதேசத்துக்கும் சென்று வந்துள்ளார். எனவே, அவர் குறித்து பெரிய கேள்விக்குறி உள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது.
சோனம் வாங்சுக் தூண்டுதலில் ஈடுபடக் கூடியவர். அரபு ஸ்பிரிங், நேபாளம் மற்றும் வங்கதேசத்தை (பெரும் போராட்டத்தைக் குறிக்கும் வகையில்) அவர் குறிப்பிட்டுள்ளார். இவருக்காகத் திரளும் நிதியில் எஃப்சிஆர்ஏ எனப்படும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட விதிமீறல்கள் ஏதேனும் இருக்கிறதா என்றும் விசாரித்து வருகிறோம்.
செப்டம்பர் 24 அன்று துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். பொதுமக்கள், காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப்படை அதிகாரிகள் எனப் பலர் காயமடைந்தார்கள். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையை நாசப்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்துள்ளன. காலநிலை ஆர்வலர்கள் எனச் சொல்லப்படும் சிலரது தலையீடு உள்ளது. அவர்களுடைய உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதில் அடிபடும் முக்கியப் பெயர் சோனம் வாங்சுக்" என்றார் அவர்.
Ladakh | Sonam Wangchuk | National Security Act | NSA | Ladakh DGP |