அணு ஆயுத அச்சுறுத்தல் குறித்த பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனிரின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி அசீம் முனீர் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு நடைபெற்ற ஒரு விருந்தில் கலந்துகொண்டு பேசிய முனீர், `நாம் அணு ஆயுதத்தைக் கொண்டுள்ள ஒரு நாடு; நாம் வீழ்ச்சியடைவது தெரிந்தால், பாதி உலகத்தையே நம்முடன் அழைத்துச் செல்வோம்’ என்று கூறியதாக செய்திகள் வெளியாகின.
மேலும், சிந்து நதியில் அணை கட்டும் பணியை இந்தியா தொடர்ந்தால், தனது நீர் உரிமைகளை எந்த விலை கொடுத்தாவது பாகிஸ்தான் பாதுகாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது,
`அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்கள் மீது நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். அணு ஆயுத அச்சுறுத்தலை பாகிஸ்தான் விடுப்பது வழக்கமானதே. இத்தகைய கருத்துகளில் காணப்படும் பொறுப்பற்ற தன்மை குறித்து சர்வதேச சமூகத்தால் முடிவுகளுக்கு வர முடியும்.
பயங்கரவாத குழுக்களுடன் கைகோர்த்து செயல்படும் ராணுவம் உள்ள ஒரு நாட்டில் அணுசக்தி கட்டளை மற்றும் கட்டுப்பாட்டின் நிலை குறித்து நிலவும் சந்தேகங்களை இத்தகைய பேச்சுக்கள் வலுப்படுத்துகின்றன.
அதிலும், நட்பாக இருக்கும் மூன்றாவது நாட்டின் மண்ணில் இருந்தபடி இப்படி ஒரு கருத்து கூறப்பட்டிருப்பது வருந்தத்தக்கது. அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய முடியாது என்று இந்தியா ஏற்கெனவே தெளிவுபடுத்தி உள்ளது. நமது தேசப் பாதுகாப்பை வலுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து எடுப்போம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.