பஹல்காம் - கோப்புப்படம் ANI
இந்தியா

பஹல்காம் செயற்கைக்கோள் படங்களை அமெரிக்க நிறுவனம் வழங்கியதா?: செய்தியின் பின்னணி என்ன?

கடந்த கால வரலாற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இதை தற்செயல் நிகழ்வாக எண்ணி நிராகரிக்க முடியாது.

ராம் அப்பண்ணசாமி

கடந்த ஏப்.22-ல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

இதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றிடம் இருந்து, பஹல்காம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் செயற்கைக்கோள் படங்களை ஒரு பாகிஸ்தான் நிறுவனம் பெற்றதாக பிரிண்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மேக்ஸர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பட்டியலில் உலகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசுகளும், பாதுகாப்பு நிறுவனங்களும் அடங்கும். உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களை, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இஸ்ரோ ஆகியவைகூட மேக்சர் நிறுவனத்திடம் இருந்து பெருகின்றன.

இந்நிலையில், 2025 பிப்ரவரி 2 முதல் 22 வரை, வழக்கமான எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகமாக, குறைந்தபட்சம் 12 முறை இந்த நிறுவனத்திடம் இருந்து செயற்கைக்கோள் படங்கள் கோரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய, பாகிஸ்தானில் இருந்து இயங்கும் பிசினஸ் சிஸ்டம்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (பிஎஸ்ஐ), கடந்தாண்டு மேக்ஸர் டெக்னாலஜிஸின் வாடிக்கையாளராகியுள்ளது.

இதைத் தொடர்ந்தே ஜூன் 2024-ல் இருந்து பஹல்காம் செயற்கைக்கோள் படங்களைக் கோரி மேக்ஸர் டெக்னாலஜிஸ் நிறுவனத்திடம் விண்ணப்பங்கள் அதிகரிக்கத் தொடங்கியதாக பிரிண்ட் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், பஹல்காம் செயற்கைக்கோள் படங்களைக் மேக்ஸரிடம் கோரியது பாகிஸ்தானிய நிறுவனமான பிஎஸ்ஐ-தான் என்பதை உறுதிப்படுத்த எந்தவொரு ஆதாரமும் இல்லை. இருப்பினும், கடந்த கால வரலாற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இதை தற்செயல் நிகழ்வாக எண்ணி நிராகரிக்க முடியாது என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, பாகிஸ்தான் அரசு நிறுவனங்களுக்கு கணினி உபகரணங்கள் மற்றும் மென்பொருள்களை அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததற்காக, பிஎஸ்ஐ உரிமையாளர் ஒபைதுல்லா சையத் மீது அமெரிக்க அரசு சார்பில் முன்னதாக வழக்கு தொடரப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதேநேரம், பஹல்காம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை பிஎஸ்ஐ கோரவில்லை என்று பிரிண்ட் ஊடகத்தால் கடந்த மே 6-ல் அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்கு மேக்ஸர் நிறுவனம் பதிலளித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான முழுமையான செய்தியை கடந்த மே 9-ல் பிரிண்ட் செய்தி ஊடகம் வெளியிட்டது. இந்த செய்தி வெளியான பிறகு, மேக்ஸர் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பட்டியலில் இருந்து பிஎஸ்ஐ நிறுவனம் நீக்கப்பட்டுள்ளது அதன் இணையதளத்தின் மூலம் தெரியவந்துள்ளது.