பாதுகாப்புப் பணியில் சிஆர்பிஎஃப் வீரர் ANI
இந்தியா

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதி பாக். ராணுவப் படையைச் சேர்ந்தவரா?

பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சி பெற்ற துணை கமாண்டோ பிரிவைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும்.

கிழக்கு நியூஸ்

பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளி ஹஷிம் முசா முன்பு பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்தவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தார்கள். இதுதொடர்பாக அடையாளம் காணப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஹஷிம் முசா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹஷிம் முசா தொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி, இவர் முன்பு பாகிஸ்தான் ராணுவப் படையைச் சேர்ந்தவராக இருந்துள்ளார்.

இவர் பாகிஸ்தான் ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிறகு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பில் இணைந்ததாகத் தெரிகிறது. கடந்த 2023 செப்டம்பரில் இவர் இந்தியாவுக்குள் ஊடுருவியிருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. ஸ்ரீநகர் அருகே புட்காம் மாவட்டத்தில் இவர் செயல்பட்டிருக்க வேண்டும். அதேசமயம், பாகிஸ்தான் ராணுவம் கேட்டுக்கொண்டதன்படியே இவர் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் சேர்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சி பெற்ற துணை கமாண்டோ பிரிவைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும். பஹல்காம் தாக்குதலில் சந்தேகிக்கப்படும் நபர்களாக 14 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் மூலமே முசா குறித்த பின்னணி தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருவர் மற்றும் உள்ளூர்வாசிகள் இருவருக்கு இந்தத் தாக்குதலில் நேரடித் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டாலும், மற்ற பயங்கரவாதிகளுக்கும் பஹல்காம் தாக்குதலில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.