அஜித் குமாருக்கு பத்ம பூஷணும், அஸ்வினுக்கு பத்மஸ்ரீயும் இன்று (ஜன.25) அறிவிக்கப்பட்டுள்ளன.
கலைத் துறை, சமூகப் பணி, அறிவியல், பொறியியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 23 பேர் பெண்கள். 10 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
சுஸுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலர் ஒசாமு சுஸுகி, முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜேஎஸ் கெஹர், புகழ்பெற்ற பாடகி ஷாரதா சின்ஹா, அண்மையில் மறைந்த மலையாள இலக்கிய ஆளுமை எம்.டி. வாசுதேவன் நாயர் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள 19 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 3 பேர். தொழில் துறையில் சிறந்து விளங்கியதற்காக நல்லி குப்புசாமி செட்டி, கலைத் துறையில் சிறந்து விளங்கியதற்காக அஜித் குமார் மற்றும் ஷோபனா சந்திரகுமார் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்ற ஆர் அஸ்வினுக்கு விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்கியதற்காக பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து கலைப் பிரிவில் சிறந்து விளங்கியதற்காக குருவாயூர் துரை, சமையல் கலைஞர் தாமோதரன், இலக்கியம் மற்றும் கல்வி - ஊடகவியல் பிரிவில் சிறந்து விளங்கியதற்காக லட்சுமிபதி ராமசுப்பையர், அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவுக்காக எம்டி ஸ்ரீநிவாஸ், கலைப் பிரிவுக்காக புரிசை கண்ணப்ப சம்பந்தன், விளையாட்டுப் பிரிவுக்காக ஆர் அஸ்வின், தொழில் துறைக்காக சந்திரமோகன், கலைப் பிரிவுக்காக ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, இலக்கியம் மற்றும் கல்வித் துறைக்காக சீனி விஸ்வநாதன், கலைப் பிரிவுக்காக பறையிசைக் கலைஞர் வேலு ஆசான் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட தில்லியைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதனுக்கு பொது விவகாரங்கள் பிரிவில் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருதுகள் முழுப் பட்டியல்: இங்கே க்ளிக் செய்யவும்...