இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து சோசியலிசம் மற்றும் மதச்சார்பற்ற ஆகிய இரு வார்த்தைகளை நீக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் வரும் நவ.25-ல் உத்தரவு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
1949-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒருவானபோது, அதன் முகப்புரையில் (Preamble) மதச்சார்பின்மை மற்றும் சோசியலிசம் என இரண்டு வார்த்தைகள் இடம்பெறவில்லை. அவசர நிலை அமலில் இருந்த காலகட்டமான 1976-ல் 42வது சட்டதிருத்தத்தின் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் மதச்சார்பின்மை மற்றும் சோசியலிசம் ஆகிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.
இந்த இரு வார்த்தைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இருந்து நீக்கக்கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, வழக்கறிஞர்கள் அஸ்வினி உபத்யாய், விஷ்ணு சங்கர் ஜெயின் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணையை கடந்த அக்டோபரில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.வி. சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
சில அரசியல் சித்தாந்தங்களை இந்திய மக்கள் மீது திணிப்பதால், அவர்களின் தேர்தெடுப்பதற்கான உரிமைகள் பறிபோகும் என இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவரான பி.ஆர். அம்பேத்கர் கருதினார். அதனால்தான் இந்த இரு வார்த்தைகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறவில்லை என்பது மனுதாரர்களில் ஒருவரான விஷ்ணு சங்கர் ஜெயினின் வாதமாக இருந்தது.
மேலும், இந்த இரு வார்த்தைகளும் 1976-ல் அரசிலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டன. எனவே இந்த இரு வார்த்தைகளை தாங்கியிருக்கும் முகப்புரையில் அரசியலமைப்பு சட்டம் நிறைவேறிய ஆண்டான 1949-ஐ குறிப்பிட்டிருப்பது தவறு. எனவே முகப்புரையை நாம் இரண்டு பகுதிகளாக வைத்திருக்கலாம். ஒன்று தேதியுடன் மற்றொன்று தேதியில்லாமல் என வாதிட்டார் மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான இறுதி உத்தரவு வரும் நவ.25-ல் வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று (நவ.22) அறிவித்துள்ளது.