கலவரத்தால் பாதிக்கப்பட்ட உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்குச் செல்ல எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், எம்.பி. பிரியங்கா காந்திக்கும் அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்.
உத்தர பிரதேசத்தின் சம்பல் நகரில் இருக்கும் ஷாஹி ஜமா மசூதி அமைந்துள்ள இடத்தில் முன்பு ஹிந்து கோயில் இருந்ததாகக் கூறி அம்மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் கடந்த நவ.24-ல் தொல்லியல் துறையினர் மசூதிக்கு ஆய்வு மேற்கொள்ளச் சென்றனர்.
அப்போது காவல் துறையினருக்கும், பொதுமக்களில் இருந்த ஒரு குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக கலவரம் வெடித்தது. கலவரத்தில் பாதிக்கப்பட்டு 4 பொதுமக்கள் உயிரிழந்தனர், பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக 31 நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். மேலும் சம்பல் மாவட்டத்திற்கு வெளியாட்கள் நுழைய டிச.10 வரை தடை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்திக்கும் வகையில் தலைநகர் தில்லியில் இருந்து இன்று (டிச.4) காலை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், எம்.பி. பிரியங்கா காந்தியும் கிளம்பினர். ஆனால் தில்லி-உத்தர பிரதேச எல்லையான காஸிபூரில் வைத்து உ.பி. காவல்துறையினரால் அவர்களது வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. உ.பி.க்குள் செல்ல அவர்கள் இருவருக்கும் அனுமதி மறுக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதை அடுத்து தில்லி-மீரட் அதிவேக நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் சம்பல் செல்லும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு இருவரும் தில்லிக்கு திரும்பினர்.
இந்நிலையில் உ.பி.க்குள் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.