என்சிஇஆர்டியின் ஆங்கிலப் பாட புத்தகங்களுக்கு ஹிந்தியில் தலைப்பு வைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், என்சிஇஆர்டியின் ஆங்கிலப் பாட புத்தகங்களின் தலைப்புகள் ஹிந்தியில் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசுக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
என்சிஇஆர்டியின் இந்த முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துக் கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியதாவது,
`இது பகுத்தறிவற்ற செயலாகும். ஆங்கில வழிக் கல்விப் பாட புத்தகங்களுக்கு ஹிந்தி தலைப்புகளை உபயோகிப்பது, நாட்டின் மொழிப் பன்முகத்தன்மையை குறைத்து மதிப்பிடும் கலாச்சாரச் திணிப்பாகும். என்சிஇஆர்டியின் இந்த முடிவு கூட்டாட்சித் தத்துவத்தையும், அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளையும் பாதிக்கிறது’ என்றார்.
அதோடு, இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, என்சிஇஆர்டி கைவிடவேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்களுக்கு ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`ஆங்கில வழிப் பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் ஹிந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்களில் ஹிந்தி. என்சிஇஆர்டி தொடங்கி எம்.பி.க்களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் ஹிந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை ஹிந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா?’ என்றார்.