நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் ANI
இந்தியா

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் | Gas Cylinder |

ஆள்பவர்களின் கொள்கைகள், உத்திகள் காரணமாக மக்கள் எவ்வளவுதான் பொறுத்துக் கொள்வார்கள்....

கிழக்கு நியூஸ்

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதலும், அதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதலும், உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வது தடைபட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து எரிவாயு ஏற்றுமதி முடங்கியுள்ளதால், நாடு முழுவதும் நேற்று (மார்ச் 10) முதல் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருள்கள் சட்டம் அமல்

இதையடுத்து, சமையல் எரிவாயு சிலிண்டர் பதுக்கலை தடுக்க அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி, சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. வீட்டு உபயோகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை தவிர்க்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விநியோகத்தை எரிவாயு நிறுவனங்கள் நிறுத்திவைத்துள்ளன.

நாடாளுமன்றத்தில் போராட்டம்

இந்த நிலையில், எரிவாயு தட்டுப்பாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். அப்போது, “பிரதமர் சமரசம் செய்து கொண்டார்” என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். மேலும் நாடாளுமன்ற மக்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையின் முதல் அமர்வு 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மக்கள் எவ்வளவு பொறுப்பார்கள்?

இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறியதாவது:-

”பொதுமக்கள் எவ்வளவுதான் பொறுத்துக்கொள்வார்கள்? இந்த 10 ஆண்டுகளில் வேலையின்மையும் அதிகரித்திருக்கிறது. எத்தனை பொருள்களின் விலைகளும் உயர்ந்திருக்கின்றன. இப்போது அடுத்ததாக சமையல் எரிவாயு சிலிண்டர் நிலவரம். ஆள்பவர்களின் கொள்கைகள், உத்திகள் காரணமாக மக்கள் எவ்வளவுதான் பொறுத்துக் கொள்வார்கள். இதையெல்லாம் பற்றி நாடாளுமன்றத்தில் நல்ல விவாதங்கள் நடந்தால் நன்றாக இருக்கும். அப்போதுதான் குறைந்தபட்சம் மக்களின் கேள்விகளை நாங்கள் எழுப்ப முடியும்” என்றார்.

Lok Sabha opposition party members protested against LPG Cylinder scarcity. Congress MPs Priyanka Gandhi, Lok Sabha MPs B. Manickam Tagore, Prashant Yadaorao Padole, and Chamala Kiran Kumar Reddy with other MPs protest at Parliament premises during the ongoing Budget Session, in New Delhi on Wednesday.