நாடாளுமன்ற வளாகத்தில் வெங்காய மாலை அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று காலை (ஆகஸ்ட் 8) போராட்டம் நடத்தினார்கள்.
வெங்காயம், தக்காளி என அன்றாடம் சமையலுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து விலையேற்றத்தைச் சந்தித்து வருகிறது. இந்த ஆண்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை பலமுறை ரூ. 100-ஐ கடந்துள்ளது. மேலும் வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலையும் தொடர்ந்து ஏற்றத்தைச் சந்தித்து வருகிறது.
இதற்கு வறட்சி, பருவ மழை பொய்த்துப்போனது போன்ற பல விஷயங்கள் காரணிகளாகக் கூறப்படுகின்றன. இந்த விலையேற்றத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட வேண்டும், மக்களின் கண்ணீரைத் துடைக்க அரசு முன்வர வேண்டும் எனக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்.
வெங்காய மாலைகள் அணிந்திருந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், `பியாஜ்கா தாம் கம் கரோ’ அதாவது, `வெங்காயத்தின் விலையைக் குறையுங்கள்’ என்று முழக்கமிட்டனர்.
இந்திய அரசின் சில புள்ளிவிவரங்களில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் நாட்டில் அதிகமாக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது.