ANI
இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

ராம் அப்பண்ணசாமி

மத்திய புலனாய்வு அமைப்புகளைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இண்டியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் போராடி வருகின்றனர்.

தில்லி மதுமான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் உள்ளார் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். கடந்த வாரம் மேலும் ஒரு புதிய வழக்கில் கெஜ்ரிவாலைக் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து விசாரித்து வருகிறது சிபிஐ.

மேலும் 18-வது மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஜார்க்கண்ட மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நில ஆக்கிரமிப்பு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஹேமந்த் சோரனுக்கு எதிராகப் போதுமான ஆதாரம் இல்லை எனக்கூறி ஜாமீனில் விடுவித்தது ஜார்க்கண்ட் நீதிமன்றம்.

ஜார்க்கண்ட் மாநிலத்துக்கான சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன் பொதுத் தேர்தல் எப்போது நடந்தாலும் அதைச் சந்திக்க தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இதனால் எதிர்க்கட்சித் தலைவர்களை இலக்காக வைத்து மத்திய புலனாய்வு அமைப்புகள் செயல்பட்டு வருவதாகக் கூறி அதைக் கண்டித்து இண்டியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர்.