இந்தியா

டீக்கடைக்காரர் அரசைத் திறமையாக நடத்துவதில் எதிர்க்கட்சிகளுக்கு பிரச்னை: நிதியமைச்சர்

2004-2005 மத்திய பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இதனால் அந்த மாநிலங்களுக்கு நிதி கிடைக்கவில்லையா என்ன?

ராம் அப்பண்ணசாமி

`ஒரு சாதாரண டீக்கடைக்காரர் அரசு நிர்வாகத்தைத் திறமையாக நடத்துவதில் எதிர்க்கட்சிகளுக்கு பிரச்னை இருக்கிறது’ என்று மத்திய பட்ஜெட் விவாதத்தின் பதிலுரையின்போது மக்களவையில் குறிப்பிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கடந்த ஜூலை 23-ல் மோடி 3.0 அரசின் முதல் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதை அடுத்து பாஜக கூட்டணிக்கட்சிகள் ஆட்சி செய்யும் ஆந்திரா மற்றும் பீஹாருக்கு மட்டும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதனைத் தொடர்ந்து ஜூலை 24, 25, 26, 29 ஆகிய தேதிகளில் மத்திய பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்றது. பட்ஜெட் விவாதத்தின் இறுதி நாளான இன்று (ஜூலை 30) தன் பதிலுரையை அளித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதியமைச்சர் அளித்த பதிலுரையின் சுருக்கம் பின்வருமாறு:

`ஒரு சாதாரண டீக்கடைக்காரர் அரசு நிர்வாகத்தைத் திறமையாக நடத்துவதில் எதிர்க்கட்சிகளுக்கு பிரச்சனை இருக்கிறது. ஆனால் இதற்கு மேல் இது வேலைக்கு ஆகாது. பட்ஜெட்டில் ஒரு மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடாவிட்டால் அம்மாநிலத்துக்கு நிதி கிடைக்காதது என்று பரப்பப்படும் தகவல் தவறானது.

2004-2005 மத்திய பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இதனால் அந்த மாநிலங்களுக்கு நிதி கிடைக்கவில்லையா என்ன? இதே போல 18 மாநிலங்களின் பெயர்கள் 2005-2006-ல் குறிப்பிடப்படவில்லை. 2009-2010 முழு பட்ஜெட்டில் 20 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. எந்த மாநிலத்துக்கும் நிதியை மறுக்கவில்லை. அந்தந்த மாநிலங்களுக்கு அவற்றுக்கான நிதி கிடைத்து வருகிறது.

ஹார்வர்ட், ஆக்ஸ்ஃபோர்டில் படித்தவர்கள் காங்கிரஸ் ஆட்சியின்போது நாட்டை வழிநடத்தினார்கள். ஆனால் 2009-2013 பணவீக்கம் நாட்டில் அதிகமாக இருந்தது. மேலும் காங்கிரஸ் ஆட்சியின்போது வெளிப்படைத்தன்மை குறைவாக இருந்தது. ஆனால் எங்கள் ஆட்சியில் அப்படி இல்லை’.