அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தெரிவித்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றன.
இந்திய அரசியலைமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பிக்கும் வகையில், அரசியலமைப்பு சட்டம் தொடர்பான சிறப்பு விவாதம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,
`அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் எனக் கூறுவது இப்போது வழக்கமாகிவிட்டது. இத்தனை முறை கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்’ என்றார்.
மேலும் பேசிய அமித் ஷா, `நூறு முறை வேண்டுமானாலும் அவரது பெயரைக் கூறுங்கள், ஆனால் அவர் குறித்த உங்களது உணர்வுகள் என்ன என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன். எஸ்.சி.க்கள், எஸ்.டி.க்கள் சரியான முறையில் நடத்தப்படவில்லை எனப் பல முறை அம்பேத்கர் தெரிவித்துள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாததை அடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார்’ என்றார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, `மனுஸ்மிருதியை பின்பற்றுபவர்களுக்கு அம்பேத்கர் என்றால் தொந்தரவு ஏற்படவே செய்யும்’ என்றார். இதனை அடுத்து ராகுல் காந்தி தலைமையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று (டிச.18) காலை நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மேற்கொண்ட அமளியை அடுத்து, இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக விமர்சித்து தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், `அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!’ என்றார்.