ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை தவறானது என்றும் அதற்காக இந்திரா காந்தி உயிரை இழக்க நேரிட்டது என்றும் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சலப் பிரதேசம் கசௌலியில் குஷ்வந்த் சிங் இலக்கியத் திருவிழா நடைபெற்று வருகிறது. பத்திரிகையாளர் ஹரிந்தர் பவேஜாவின், "தே வில் ஷூட் யூ, மேடம் (They Will Shoot You Madam)" நூல் குறித்த கலந்துரையாடலில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கலந்துகொண்டார்.
இதில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் குறித்து ப. சிதம்பரம் கூறியதாவது:
"இங்குள்ள ராணுவ அதிகாரிகள் யாரையும் அவமதிக்கவில்லை. ஆனால், பொற்கோயிலை மீட்க, ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரை மேற்கொண்டது தவறான அணுகுமுறை. சில ஆண்டுகளுக்குப் பிறகு, ராணுவம் இல்லாமல் பொற்கோயிலை எப்படி மீட்க வேண்டும் என்பதற்கான சரியான வழியை நாங்கள் காட்டினோம். அனைத்து பயங்கரவாதிகளையும் பிடித்து, அதை மீட்பதற்கென வழி இருக்கிறது. ஆனால், ப்ளூ ஸ்டார் ஆபரேஷன் தவறான அணுகுமுறை. அந்தத் தவறுக்காக இந்திரா காந்தி தனது உயிரையே இழக்க நேர்ந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ராணுவம், காவல் துறை, உளவுத் துறை மற்றும் அனைத்து அமைப்புகளின் கூட்டு முடிவு தான் அந்தத் தவறு. இந்திரா காந்தியை மட்டும் குறை கூறிவிட முடியாது" என்று ப. சிதம்பரம் பேசியுள்ளார்.
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்
1984-ல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலிலிருந்து ஜர்னைல் சிங் தலைமையிலான சீக்கிய பிரிவினைவாதிகளை வெளியேற்ற ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் எனும் ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி. ஜூன் 1 முதல் ஜூன் 8 வரை நடைபெற்ற இந்த ராணுவ நடவடிக்கையில் சீக்கியப் போராளிகள், மக்கள், ராணுவ அதிகாரிகள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். இந்திரா காந்தியின் இந்தச் செயல் சீக்கியர்களைப் பெரும் கொதிப்படையச் செய்தது. தங்களுடைய மதத்தின் மீதான தாக்குதலாகவே சீக்கியர்கள் கருதியதாகக் கூறப்படுவதுண்டு.
இதன் எதிரொலியாகவே அக்டோபர் 31, 1984-ல் இரு சீக்கிய பாதுகாவலர்களால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, நாடு முழுக்க சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது.
P Chidambaram | Operation Blue Star | Indira Gandhi |