அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து (Ahmedabad Air India Plane Crash) தொடர்புடைய முதற்கட்ட விசாரணை அறிக்கையை விமான விபத்துகளுக்கான புலனாய்வு அமைப்பு (AAIB Report) வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் விமானிகளின் கடைசி நொடி உரையாடல், பறவைகள் மோதல் இல்லை, செயலிழந்த என்ஜின்கள் என பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.
குஜராத் மாநிலம் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜுன் 12 அன்று லண்டனை நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம் (Air India flight AI171), புறப்பட்ட சில வினாடிகளிலேயே பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 260 பேர் வரை உயிரிழந்தார்கள். விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தார்கள்.
விமான விபத்து பற்றி விமான விபத்துகளுக்கான புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வந்தது. இந்த அமைப்பு 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, விமானத்தில் என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டிருக்கிறது. இதற்கான ஸ்விட்ச் கட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. ஒரு விமானி எதற்காக கட் ஆஃப் செய்தாய் என்று கேட்டிருக்கிறார். இதற்கு சக விமானி நான் கட் ஆஃப் செய்யவில்லை எனப் பதிலளித்திருக்கிறார்.
மேலும் படிக்க: அஹமதாபாத் விமான விபத்து: முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல்!
என்ஜின்களுக்கான இரு ஸ்விட்ச்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இருந்தபோதிலும், ஒரு என்ஜின் மட்டுமே பகுதியளவு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மற்றொர என்ஜின் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது கருப்புப் பெட்டி தரவுகள் மூலம் தெரியவந்துள்ளன.
விமான நிலைய சிசிடிவி காட்சிகள் மூலம் ரேட் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்ஜின்கள் செயலிழக்கும்போது, ரேட் அமைப்பு மூலம் விமானத்தை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு முடியும். இதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
பறவைகள் மோதல் எதுவும் நிகழவில்லை, விமானத்தில் சரியான எடையிலேயே பொருள்கள் இருந்துள்ளன, அபாயகரமான பொருள்கள் எதுவும் இல்லை என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டது.
எரிபொருள் தடைபட்டதால், இரு என்ஜின்களும் சில விநாடிகளிலேயே செயலிழந்தன.
எரிபொருள் விநியோகத்தைத் தடை செய்தது ஏன் விமானி ஒருவர் கேட்க, நான் தடை செய்யவில்லை என்று சக விமானி பதிலளித்திருக்கிறார்.
என்ஜின்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வர விமானிகள் முயற்சி.
ஒரு என்ஜின் பகுதியளவு செயல்பாட்டுக்கு வந்தது. மற்றொரு என்ஜின் இறுதிவரை செயல்படவில்லை.
ரேட் அமைப்பு மூலம் விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி நடந்துள்ளது.