இந்தியா

சர்வதேச மகளிர் நாள்: பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தை கையாளும் 6 பெண்கள் யார்?

அனைத்துப் பெண்களுக்கும், குறிப்பாக இளம் பெண்களுக்கு ஒரு செய்தி சொல்ல விரும்புகிறேன். தடைகள் எது வந்தாலும் உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள்.

ராம் அப்பண்ணசாமி

மகளிர் தினத்தை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் பக்கத்தை தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி உள்ளிட்ட பல்வேறு சாதனைகளைப் புரிந்த 6 பெண்கள் இன்று (மார்ச் 8) கையாள்கிறார்கள்.

நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி, இன்று ஒரு நாள் தனது எக்ஸ் சமூக வலை தளப் பக்கத்தை பெண்கள் நிர்வகிப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி முன்பு அறிவித்திருந்தார்.

இதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, அணு விஞ்ஞானி எலினா மிஸ்ரா, விண்வெளி விஞ்ஞானி ஷில்பி சோனி, பீஹாரைச் சேர்ந்த காளான் வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் அனிதா தேவி, ஃபிரான்டயர் மார்கெட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய்தா ஷா மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பான சமர்த்தியத்தின் இணை நிறுவனரான மருத்துவர் அஞ்சலி அகர்வால் ஆகிய 6 பெண்களும் ஒருவர் பின் ஒருவராக பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தை கையாண்டு அதில் பதிவிட்டார்கள்.

வைஷாலி வெளியிட்ட பதிவில் கூறியதாவது,

`பிரதமரின் சமூக ஊடக கணக்குகளை கையாளும் வாய்ப்பு மகளிர் தினத்தன்று வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் செஸ் விளையாடுவது, உங்களில் பலருக்குத் தெரியும். செஸ் போட்டிகளில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். 6-ம் வயதிலிருந்து நான் செஸ் விளையாடி வருகிறேன்.

அனைத்துப் பெண்களுக்கும், குறிப்பாக இளம் பெண்களுக்கு ஒரு செய்தி சொல்ல விரும்புகிறேன். தடைகள் எது வந்தாலும் உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள். உங்கள் ஆர்வம் வெற்றிக்கான சக்தியை அளிக்கும். தங்கள் கனவுகளைப் பெண்கள் பின்பற்றவும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் எந்த துறையிலும் தடைகளைத் தகர்க்கவும் நான் ஊக்குவிக்க விரும்புகிறேன். ஏனென்றால் அவர்களால் முடியும் என்பது எனக்குத் தெரியும்!

எனது FIDE தரவரிசையை மேலும் மேம்படுத்தி, எனது நாட்டை பெருமைப்படுத்த விரும்புகிறேன். செஸ் எனக்கு நிறைய கொடுத்துள்ளது. நான் விரும்பும் விளையாட்டுக்கு மேலும் பங்களிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அதே உணர்வின் அடிப்படையில், இளம் பெண்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டைத் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சிறந்த ஆசிரியர்களில் விளையாட்டும் ஒன்றாகும்.

பெற்றோர்களுக்கும் உடன்பிறந்தோருக்குமான ஒரு செய்தி என்னிடம் உள்ளது. பெண்களை ஆதரியுங்கள். அவர்களின் திறமையை நம்புங்கள், அவர்கள் அற்புதங்களைச் செய்வார்கள். எனது ஆதரவாக இருக்கும் பெற்றோர்கள் ரமேஷ்பாபு மற்றும் நாகலட்சுமி ஆகியோரால் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

என் சகோதரர் பிரக்ஞானந்தாவும் நானும் நெருக்கமான பிணைப்புடன் இருக்கிறோம். சிறந்த பயிற்சியாளர்களும், அணி வீரர்களும் இருப்பதால் நானும் அதிர்ஷ்டசாலிதான்.

இன்றைய இந்தியா, பெண் விளையாட்டு வீரர்களுக்கு நிறைய ஆதரவை வழங்குவதை நான் உணர்கிறேன், இது மிகவும் ஊக்கமளிக்கிறது. பெண்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிப்பதில் இருந்து அவர்களுக்குப் பயிற்சி வழங்குவது வரை, இந்தியா அடைந்து வரும் முன்னேற்றம் மிகவும் விதிவிலக்கானது’ என்றார்.