கோப்புப்படம் ANI
இந்தியா

பெண் கடத்தல் வழக்கு: பிணையில் வெளியே வந்தார் ரேவண்ணா

கிழக்கு நியூஸ்

பெண் கடத்தல் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்ட ஹெச்.டி. ரேவண்ணா, பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவெகௌடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாசக் காணொளி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக தேவெகௌடாவின் மகன் ஹெச்.டி. ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா ஆகிய இருவரும் இடைக்கால ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் முறையிட்டார்கள். ஆனால், இவர்களுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனிடையே, ரேவண்ணா வீட்டில் பணிபுரிந்த பெண் பணியாளர், கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் ரேவண்ணா கடந்த 4-ம் தேதி சிறப்பு விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணும் கர்நாடக காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட் ரேவண்ணாவை மே 14 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, பெண் கடத்தல் வழக்கில் ஹெச்.டி. ரேவண்ணாவுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கி சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் ரேவண்ணா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.