இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததா?: தேசிய தேர்வு முகமை விளக்கம்

கிழக்கு நியூஸ்

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 557 நகரங்களிலும், வெளிநாட்டில் 14 நகரங்களிலும் நடைபெற்றது. நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக இணையத்தில் தகவல்கள் பரவின.

இதைத் தொடர்ந்து, வினாத்தாள் கசியவில்லை என நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது.

"வினாத்தாள் கசிந்ததாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. இது வெறும் பரபரப்புக்காகப் பகிரப்பட்ட செய்தி. ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூரில் ஆதர்ஷ் வித்யா மந்தீர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் மட்டும் ஹிந்தி வழியில் தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு, தவறுதலாக ஆங்கில வழியிலான வினாத்தாள் வழங்கப்பட்டது. இந்தத் தவறை தேர்வு நடத்துபவர் சரி செய்வதற்குள் மாணவர்கள் வலுக்கட்டாயமாக வினாத்தாளுடன் வெளியேறினார்கள்.

விதிப்படி, தேர்வு முடிந்தவுடன்தான் மாணவர்கள் வினாத்தாளுடன் தேர்வறையிலிருந்து வெளியேற வேண்டும். ஆனால், சில மாணவர்கள் வேண்டுமென்றே வினாத்தாளுடன் வெளியேறியிருக்கிறார்கள்.

இதன் காரணமாகத்தான் மாலை 4 மணிக்கு வினாத்தாள் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் நாடு முழுவதும் அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு ஏற்கெனவே தொடங்கிவிட்டது. எனவே, வினாத்தாள் கசியவில்லை" என்று தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.