இந்தியா

இடைக்கால சபாநாயகருக்கு ஒத்துழைப்பு இல்லை: இண்டியா கூட்டணி

ராம் அப்பண்ணசாமி

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ல் தொடங்குகிறது. கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்கள் (24, 25) புதிதாகத் தேர்வாகியுள்ள மக்களவை உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் உறுதிமொழிப் பிரமாணம் செய்து வைப்பார்.

18வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக ஒடிஷா மாநிலம் கட்டாக் தொகுதியின் பாஜக எம்.பி பர்த்ருஹரி மஹ்தாப் அவர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த ஜூன் 21-ல் உத்தரவிட்டார். மக்களவையின் மூத்த உறுப்பினரை இடைக்கால சபாநாயகராக நியமிப்பது மரபாகப் பின்பற்றப்பட்டு வரும் வேளையில் பர்த்ருஹரி மஹ்தாப்பை இடைக்கால சபாநாயகராக நியமித்ததை எதிர்க்கட்சிகள் கண்டித்து வருகின்றன.

கட்டாக் தொகுதியின் மக்களவை உறுப்பினராக பர்த்ருஹரி மஹ்தாப் தொடர்ந்து ஏழாவது முறையாக மக்களவைக்கு தேர்வாகியுள்ளார். ஆனால் கேரளாவிலிருந்து மக்களவைக்குத் தேர்வாகியுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ் எட்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்வாகியுள்ளார்.

எனவே கொடிக்குன்னில் சுரேஷை இடைக்கால சபாநாயகராக நியமிக்காமல் பாஜக அரசியல் செய்கிறது என எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுக்குக் கண்டனத்தைத் தெரிவித்தன. மேலும், இடைக்கால சபாநாயகருக்குத் தங்களின் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை எனவும் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.

புதிதாகத் தேர்வாகியுள்ள மக்களவை உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் உறுதிமொழிப் பிரமாணம் செய்து வைப்பார். அதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகரைத் தேர்தெடுக்கும் தேர்தலை நடத்துவார் இடைக்கால சபாநாயகர். புதிய சபாநாயகர் தேர்வானதும் இடைக்கால சபாநாயகர் பதவி தானாகவே முடிவுக்கு வரும்.