நிலச்சரிவு குறித்து முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமித் ஷா கூறுவது உண்மைக்கு மாறானதாக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. இதனிடையே, மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கனமழை மற்றும் நிலச்சரிவு குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன், அமித் ஷாவின் தகவலை மறுத்துள்ளார்.
"இது பழி சுமத்துவதற்கான நேரமல்ல. எனினும், மாநிலங்களவையிலிருந்து கிடைத்த தகவலின்படி நிலச்சரிவு குறித்து ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், கேரளம் முறையாகச் செயல்படாததும் காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் கோருகிறார். நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பு இந்திய
நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. 115 முதல் 204 மி.மீ. வரை மட்டுமே மழைப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு பதிவான மழைப்பொழிவு மிக அதிகமானது. முதல் 24 மணி நேரத்தில் இந்தப் பகுதியில் 200 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் 372 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் 572 மி.மீ. மழைப்பொழிவு பதிவானது. இது முன்கூட்டியே கொடுக்கப்பட்ட எச்சரிக்கையைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம். பேரிடர் ஏற்படுவதற்கு முன்பு சிவப்பு நிற எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை. எனினும், இந்தச் சம்பவம் நிகழ்ந்த பிறகு ஜூலை 30 காலை 6 மணிக்குதான் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த தகவல்கள் உண்மைக்கு மாறானதாக உள்ளன" என்றார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.