தமிழ்நாட்டுக்கு இரு முறை சென்றபோதும், தன்னுடையக் கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் பங்கெடுக்கவில்லை என மத்திய வேளாண் துறை அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது தமிழ்நாடு சார்ந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் பதிலளித்துப் பேசினார்.
"வேளாண் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த பணிகளுக்காக தமிழ்நாட்டுக்கு நான் இரு முறை சென்றுள்ளேன். நான் குற்றம் சொல்லவில்லை. ஆனால், இரு முறையும் என்னுடையக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் கலந்துகொள்ளவில்லை, வேளாண் துறை அமைச்சரும் கலந்துகொள்ளவில்லை.
தமிழக விவசாயப் பெருங்குடி மக்கள் பயன்பெற நீங்கள் என்னை அழைத்தால் நான் தமிழகத்திற்கு மீண்டும் வருகிறேன். நாங்கள் தமிழகத்தின் மகத்தான மக்களை வணங்குகிறோம், தமிழ் கலாச்சாரத்தை வணங்குகிறோம், தமிழ் மொழியை வணங்குகிறோம். நாம் அனைவரும் பாரத அன்னையின் பிள்ளைகள், நமக்குள் பாகுபாட்டிற்கான இடமே இல்லை" என்றார் ஷிவ்ராஜ் சிங் சௌஹான்.
மக்களவையில் தேசிய கல்விக் கொள்கை தொடர்புடைய நேற்றைய விவாதத்தின்போது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை நாகரிகமற்றவர்கள் என்று குறிப்பிட்டு பேசினார். இதற்கு திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அந்தச் சொல்லைத் திரும்பப் பெறுவதாகக் கூறினார்.
எனினும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழக எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இந்நிலையில், ஷிவ்ராஜ் சிங் சௌஹான் மக்களவையில் ஆற்றிய உரை கவனம் பெற்றுள்ளது.