இளநிலை நீட் தேர்வை ரத்து செய்யும் அளவுக்குப் போதுமான முகாந்திரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த மே 5-ல் 571 மையங்களில் நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடந்ததாகக் கூறி நீட் தேர்வை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.
இந்நிலையில் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய போதுமான தரவுகள் இல்லை எனவும், ஒட்டுமொத்த நடைமுறைகளையும் மீறும் வகையில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடக்கவில்லை எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ஐஐடி வழங்கிய நீட் தேர்வு குறித்த அறிக்கையை ஆய்வு செய்துள்ளதாகவும், 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு இந்த தீர்ப்பை வழங்குவதாகவும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
மேலும் நீட் வினாத்தாளில் இருந்த இயற்பியல் தொடர்பான தெளிவற்ற ஒரு கேள்விக்கு தில்லி ஐஐடி வழங்கிய ஆலோசனையை ஏற்றுள்ளது உச்ச நீதிமன்றம். இதனால் சுமார் 4 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வில் 5 மதிப்பெண்களை இழக்க உள்ளனர். இந்தக் கேள்வியை முன்வைத்து புதிய முடிவுகளை வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளது.