கிரண் ரிஜிஜு - கோப்புப்படம் ANI
இந்தியா

தலாய் லாமா மட்டுமே அவரது வாரிசைத் தேர்தெடுக்க முடியும்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

600 ஆண்டுகள் பழமையான தலாய் லாமா பதவி எனது வாழ்நாளுக்குப் பிறகும் தொடரும்.

ராம் அப்பண்ணசாமி

புதிய தலாய் லாமாவை தங்கள் தரப்பு அங்கீகரிக்கவேண்டும் என்ற சீனாவின் கூற்றுக்கு மத்திய சிறுபான்மையினர் நல மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று (ஜூலை 3) கடுமையான ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

தனது வாரிசைத் தீர்மானிக்க, திபெத்திய பௌத்த மத தலைவரான தலாய் லாமா மற்றும் காடன் போட்ராங் அறக்கட்டளையைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்ற கருத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

600 ஆண்டுகள் பழமையான தலாய் லாமா பதவி தனது வாழ்நாளுக்குப் பிறகும் தொடரும் என்றும், 15-வது தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் தலாய் லாமாவின் அதிகாரப்பூர்வ அலுவலகமான காடன் போட்ராங் அறக்கட்டளை வசம் இருக்கும் என்றும், திபெத்திய பௌத்த மத தலைவரும், 14-வது தலாய் லாமாவுமான டென்சின் கியாட்சோ அண்மையில் கருத்து தெரிவித்தார்.

இதையும் மறுக்கும் வகையில் பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்,

`புதிய தலாய் லாமாவின் தேர்வு நடைமுறை சீன சட்டங்கள், விதிமுறைகள், மத சடங்குகள் மற்றும் வரலாற்று மரபுகளுக்கு இணங்க வேண்டும்’ என்றார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, `தலாய் லாமாவின் நிலைப்பாடு திபெத்தியர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள அனைத்து அவரது ஆதரவாளர்களுக்கும் மிகவும் முக்கியமானது. அவரது வாரிசைத் தீர்மானிக்கும் உரிமை தலாய் லாமாவுக்கே உள்ளது’ என்றார்.

தலாய் லாமாவின் 90-வது பிறந்தநாளைக் குறிக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக கிரண் ரிஜிஜுவும், ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் லல்லன் சிங்கும், ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவிற்கு செல்கின்றனர்.

சீன ஆட்சிக்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, திபெத் தலைநகர் லாசாவை விட்டு வெளியேறி, 1959-ம் ஆண்டு முதல் தலாய் லாமா இந்தியாவில் வசித்து வருகிறார்.