வரும் கல்வி ஆண்டு முதல் கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மூன்றாம் மொழிப்பாடத் தேர்வுகள் மதிப்பெண்ணுக்குப் பதிலாக கிரேடுகளில் மதிப்பிடப்படும் என்று கர்நாடக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று (மார்ச் 27) நிறைவடைந்தது. அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறியதாவது:-
“வரும் கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மூன்றாம் மொழிப்பாடத் தேர்வுகள் மதிப்பெண்ணுக்குப் பதிலாக கிரேடுகளில் மதிப்பிடப்படும். இது தொடர்பான விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்படும். இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமைய்யாவுடன் பேசினேன். மாநிலத்தில் இருமொழிக் கொள்கை குறித்த முடிவு எடுக்கப்படும்வரை மூன்றாவது மொழிப்பாடத் தேர்வுகளை கிரேடுகளில் மதிப்பிட அறிவுறுத்தினார்.
பொதுத்தேர்வு மதிப்பெண்களில் மாற்றம்
இதனால் பொதுத்தேர்வில் முன்னதாக மூன்றாவது மொழிப்பாடத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 100 மதிப்பெண்களுக்குப் பதிலாக கிரேடுகள் வழங்கப்படும். அதனால் 625 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டு வந்த பொதுத்தேர்வுகள் இனி 525 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். மூன்றாம் மொழிப்பாடத் தேர்வில் வழங்கப்படும் கிரேடுகள் மொத்த மதிப்பெண் கணக்கில் சேராது.
ஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு
பொதுவாக கர்நாடகத்தில் மூன்றாவது மொழியாக பெரும்பாலும் ஹிந்தி தான் கற்பிக்கப்படுகிறது. ஆனாலும், கன்னட அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஹிந்தி திணிக்கப்படுவதாகக் கவலை தெரிவித்துள்ளனர். கன்னடிய குழந்தைகளுக்கு ஹிந்தியைப் படிப்பதிலும் எழுதுவதிலும் சிரமம் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்த முடிவு அந்த சுமையை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழியை உடனடியாக நீக்கும் முடிவு எடுக்கப்பட்டால், இந்த மொழிகளை கற்பிக்கும் கன்னடிய ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஹிந்தி மட்டும் என்று இல்லை மாநிலத்தில் 13-14 மொழிகள் மூன்றாவது மொழியாக கற்பிக்கப்படுகின்றன. அவற்றில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி, துளு உள்ளிட்ட பல மொழிகள் அடங்கும். இனி அவற்றுக்கான தேர்வுகளில் ஏ,பி,சி, டி என கிரேடுகளில் மதிப்பிடப்படும்.
மூன்றாம் மொழிப்பாடத் தேர்வு கட்டாயம்
மூன்றாவது மொழித் தேர்வில் தேர்ச்சி அல்லது தோல்வி என்று எதுவும் இருக்காது. ஆனால் மாணவர்கள் தேர்வை எழுத வேண்டியது கட்டாயமாக்கப்படும். மாநிலத்தில் இரு-மொழிக் கொள்கையை அமல்படுத்துவது போன்ற விஷயங்கள் அரசு, அமைச்சரவை மற்றும் சட்டமன்றத்தால் முடிவு செய்யப்பட வேண்டியவை. கடந்த ஆண்டு 1.64 லட்சம் மாணவர்கள் மூன்றாவது மொழித் தேர்வில் தோல்வியடைந்தனர், அதில் 1.48 லட்சம் பேர் ஹிந்தியில் தோல்வியடைந்தனர். இது மாணவர்கள் மீதான அழுத்தத்தை எடுத்துக்காட்டுகிறது. அதைக் குறைக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
Bengaluru, Karnataka Minister Madhu Bangarappa said on Friday that, starting this academic year, the government will replace the marks system for the third language in the SSLC exam with a grading system that will not impact a student's overall results.