கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அடுத்தடுத்து பொதுமக்கள் உயிரிழந்த விவகாரத்தை கோவிட் தடுப்பூசியுடன் இணைத்து அம்மாநில முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியிருந்த நிலையில், கொரோனா தடுப்பூசிகளுக்கும், திடீர் மரணங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் எக்ஸ் கணக்கில் நேற்று (ஜூலை 1) வெளியிடப்பட்ட பதிவில் கூறியதாவது,
`கடந்த மாதத்தில் மட்டும், ஹாசன் மாவட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் இறந்துள்ளனர். இந்த விஷயத்தை அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. இந்தத் தொடர் மரணங்களுக்கான காரணத்தைக் கண்டறிந்து தீர்வுகளைக் காண, ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ரவீந்திரநாத் தலைமையில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் 10 நாள்களுக்குள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் திடீர் மரணங்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களை கண்டறியவும், கோவிட் தடுப்பூசிகள் ஏதேனும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்து முழுமையான ஆய்வை நடத்திடவும் கடந்த பிப்ரவரியில் இதே குழுவிற்கு உத்தரவுகள் வழங்கப்பட்டன.
இது தொடர்பாக, இதய நோயாளிகளைப் பரிசோதித்து பகுப்பாய்வு செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. கோவிட் தடுப்பூசியை அவசரமாக அங்கீகரித்து பொதுமக்களுக்கு விநியோகித்ததும் இந்த இறப்புகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது.
ஏனெனில், சமீபத்தில் அதிகரித்து வரும் மாரடைப்புகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று உலகளவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
மார்பு வலி அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்திற்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த அறிகுறிகளைப் புறக்கணிக்காதீர்கள்’ என்றார்.
சித்தராமையாவின் வெளிப்படையான குற்றச்சாட்டைத் தொடர்ந்து, கோவிட் தடுப்பூசிகள் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் கிளம்பின. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது விளக்கமளித்துள்ளது.
நாட்டில் உள்ள பல அமைப்புகள் வழியாக திடீர் மரணங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கோவிட் தடுப்பூசிக்கும், திடீர் மரணங்களுக்கும் நேரடியாக தொடர்பு இல்லை என்பது உறுதியாக நிறுவப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) ஆகியவற்றின் ஆய்வுகள், இந்தியாவில் உள்ள கோவிட் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்றும், மிகவும் அரிதிலும் அரிதான சமயங்களில் மட்டுமே அவை கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
மரபியல், வாழ்க்கை முறை, முன்பே இருக்கும் உடல் பாதிப்புகள் மற்றும் கோவிட் பாதிப்புக்குப் பிறகான சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் மாரடைப்பு ஏற்படலாம் என்று அமைச்சகம் விளக்கமளித்தது.
மேலும், இந்த மரணங்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சகத்தால் கூறப்பட்டுள்ளது.