இந்தியா

தில்லி காற்று மாசு: 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்பு கூடாது!

ஸ்டபிள் பர்னிங் எனப்படும் பயிர்க் கழிவுகள் எரிப்பு பிரச்னையை தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தில்லி முதல்வர் ஆதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.

ராம் அப்பண்ணசாமி

தில்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியுள்ளதால் 12-ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் இன்று (நவ.18) உத்தரவிட்டுள்ளது.

தலைநகர் தில்லியில் காற்று மாசு வரலாறு காணாத அளவுக்கு மோசமடைந்துள்ளது. இன்று (நவ.18) பிற்பகல் 1 மணி அளவில் தில்லியின் காற்று தரக்குறியீடு 490 (மிக மோசம்) ஆக பதிவானது. நடப்பாண்டு தீபாவளிக்குப் பிறகு தில்லியின் காற்று மாசு இயல்பை விட அதிகரித்த காரணத்தால் 10 மற்றும் 12 வகுப்புகளைத் தவிர பிற வகுப்பினருக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு நேற்று உத்தவிட்டிருந்தார் தில்லி முதல்வர் ஆதிஷி.

இந்நிலையில், தில்லியில் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்பு நடத்தக் கூடாது எனவும், காற்று மாசு பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் தில்லியை சுற்றி உள்ள மாநிலங்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இன்று நீதிபதி அபய் எஸ். ஓகா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 5 வருடங்களாக அதிகரித்து வரும் ஸ்டபிள் பர்னிங் (stubble burning) எனப்படும் பயிர் கழிவுகள் எரிப்புப் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள தில்லி முதல்வர் ஆதிஷி, இதற்கான விலையை வட இந்தியா கொடுத்து வருகிறது எனவும், மிக முக்கியமாக முதியவர்களும், குழந்தைகளும் மூச்சுவிட சிரமப்படுகின்றனர் எனவும் தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டு குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், காற்று மாசால் எழுந்த அளவுக்கு அதிகமான புகை மூட்டம் காரணமாக, `கேப்டன் மினிமா’ என்று அழைக்கப்படும் அவசரகால வழிமுறையின் கீழ், தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்லவிருந்த 11 விமானங்கள் ஜெய்ப்பூர், டெஹ்ராடூன் உள்ளிட்ட அண்டை நகரங்களில் தரையிறக்கப்பட்டன.