ANI
இந்தியா

பாஜக தலைமையில் எந்தக் குழப்பமும் இல்லை: கெஜ்ரிவால் கருத்துக்கு அமித் ஷா விளக்கம்

கிழக்கு நியூஸ்

பாஜகவின் தலைமையில் எந்தக் குழப்பமும் இல்லை என்றும் நரேந்திர மோடியே எதிர்காலத்திலும் நாட்டை வழிநடத்தவுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் மூலம் வெளியே வந்துள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி அலுவலகத்தில் இன்று காலை உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் யார் பிரதமர் எனக் கேள்வி கேட்கிறார்கள். உங்களுடைய பிரதமர் யார் என்று பாஜகவைப் பார்த்து கேட்கிறேன். செப்டம்பர் 17-ல் பிரதமர் மோடி 75 வயதை அடைகிறார். 75 வயதுக்குப் பிறகு கட்சியிலுள்ள தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்கிற விதியை மோடி போட்டுள்ளார். அப்படியென்றால் அமித் ஷாவுக்காக மோடி வாக்கு கேட்கிறாரா?. மோடியின் உத்தரவாதத்தை அமித் ஷா நிறைவேற்றுவாரா?" என்று கூறியிருந்தார் கெஜ்ரிவால்.

இந்த நிலையில், அமித் ஷா ஹைதராபாதில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இதுதொடர்புடைய கேள்விக்கு அவர் தலைமையில் எந்தக் குழப்பமும் இல்லை என்று விளக்கமளித்தார்.

"கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு என எந்தப் பகுதியை எடுத்துக்கொண்டாலும், மக்கள் மோடியுடன் துணை நிற்கிறார்கள். நாங்கள் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம், மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்பார் என இண்டியா கூட்டணியிலுள்ள தலைவர்கள் அனைவருக்கும் தெரியும். எனவே தான், இதுமாதிரியான தவறான கருத்துகளை அவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

பாஜகவின் கட்சி விதியில் 75 வயதைத் தாண்டினால், தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்பது போன்ற விதி எதுவும் கிடையாது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 2029 வரை மோடியே நாட்டை வழிநடத்துவார். வரவிருக்கும் தேர்தல்களிலும் மோடியே வழிநடத்துவார். இண்டியா கூட்டணிக்கு எந்தவொரு நல்ல செய்தியும் கிடையாது. பொய்களைப் பரப்பி அவர்களால் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது. எதிர்காலத்திலும் பிரதமர் மோடிதான் நாட்டை வழிநடத்தவுள்ளார். பாஜகவில் எந்தக் குழப்பமும் இல்லை" என்றார் அமித் ஷா.