இந்தியா

பிகார் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ் குமார்

முன்னதாக, சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிழக்கு நியூஸ்

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 129 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.

சில ராஷ்ட்ரிய ஜனதா தள சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி மாறி வாக்களித்ததாகக் கூறி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தார்கள்.

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திய சட்டப்பேரவைத் துணைத் தலைவர் மகேஷ்வர் ஹஸாரி, அவரவர் இடத்தில் எழுந்து நிற்கும்படி உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். அரசுக்கு ஆதரவாக 129 வாக்குகள் கிடைத்தன. அரசுக்கு எதிராக ஒரு வாக்குகூட பதிவாகவில்லை. இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சேட்டன் ஆனந்த், நீலம் தேவி மற்றும் பிரஹ்லாத் யாதவ் ஆகியோர் இடம் மாறி, ஆளும் தரப்பு இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள். இருக்கை மாறி அமர்ந்திருப்பவர்களின் வாக்குகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கோரிக்கை வைத்தது.

243 உறுப்பினர்களைக் கொண்டுள்ள பிகார் சட்டப்பேரவையில் ஐக்கிய ஜனதா தளம் 45 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பாஜக 79 உறுப்பினர்களையும், மதர்ச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 4 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்கிற நிலையில் 129 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக, பிகார் சட்டப்பேரவைத் தலைவரும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான அவாத் பிகாரி சௌதரிக்கு எதிராக ஆளும் தரப்பு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 125 உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். 112 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தார்கள்.