தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற குழுத் தலைவராக நிதீஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் வரும் நவம்பர் 20 அன்று 10-வது முறையாக பிஹார் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
பிஹார் சட்டமன்ற தேர்தலில் 202 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இதில், பாஜக 89 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனால் பிஹாரின் ஆட்சியைக் கூட்டணி தக்க வைத்துள்ளது. இதையடுத்து, பிஹாரின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற குழுத் தலைவராக நிதீஷ் குமார் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, நவம்பர் 20 அன்று பிஹார் மாநிலத்தின் முதலமைச்சராக 10-வது முறை நிதீஷ் குமார் பதவியேற்கிறார். முன்னதாக பிஹார் ஆளுநர் ஆரீஃப் முகமது கானைச் சந்தித்த நிதீஷ் குமார், தனது ராஜினாமா கடிதத்தையும் தேர்தலில் உள்ள பெரும்பான்மைக்கான பட்டியலையும் சமர்ப்பித்தார். இதைத் தொடர்ந்து தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி அரங்கில், முதலமைச்சராக அவர் பதவியேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், மற்ற மாநில பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட பலரும் பங்கேற்கவுள்ளனர்.
இம்முறை பிஹார் அமைச்சரவையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும் என்று கணிக்கப்படுகிறது. குறிப்பாக துணை முதலமைச்சராக பெண் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மேலும், வகுப்பு அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து 10 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து 7 பேர், தலித்துகள் 5 பேர், மகாதலித்துகள் 5 பேர், இஸ்லாமியர் ஒருவர் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிய வருகிறது. சட்டப்பேரவைத் தலைவர் ஒருவரையும் இரண்டு துணை முதலமைச்சர்களையும் கூட்டணி தேர்வு செய்யவுள்ளதாகத் தெரிகிறது. அமைச்சரவையில் முதலமைச்சர் உட்பட 36 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள். ஆனால் சில முக்கிய அமைச்சர் பொறுப்புகள், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு காலியாக வைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Nitish Kumar has been elected as the president of the National Democratic Alliance (NDA) in Bihar. He will take oath as the Chief Minister of Bihar for the 10th time on November 20.