பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ANI
இந்தியா

யார் இந்த நிதிஷ் குமார்? | Nitish Kumar | Bihar CM | Bihar | Bihar Elections 2025 | NDA |

சட்டப்பேரவை உறுப்பினரே கிடையாது. ஆனால், மீண்டும் மீண்டும் முதல்வர்...

கிழக்கு நியூஸ்

1995-க்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. 2025 சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. ஆனால், மூன்று முறை முதல்வர். தற்போது நான்காவது முறையும் அவர் தான் முதல்வர்.

யார் இந்த நிதிஷ் குமார்???

மார்ச் 1, 1951-ல் பாட்னாவில் மறைந்த கவிராஜ் ராம் லகான் சிங் மற்றும் பரமேஷ்வரி தேவிக்கு மகனாகப் பிறந்தவர் நிதிஷ் குமார்.

நிதிஷ் குமார் 1970-களின் மத்தியில் அரசியலில் கால் பதிக்கிறார். சோஷலிச தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணனின் சம்பூர்ண கிராந்தி புரட்சியில் ஈர்க்கப்பட்ட பல்வேறு இளைஞர்களில் நிதிஷ் குமாரும் ஒருவர். மற்றொரு சோஷலிச தலைவரான ராம் மனோஹர் லோஹியாவுடன் இணைந்துச் செயல்படத் தொடங்கினார் நிதிஷ் குமார். நிதிஷ் குமாரின் அரசியல் அடித்தளம் இவர்களிடத்திலிருந்து தான் தொடங்குகிறது. இவருடைய சமூகப் பார்வையும் இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது.

நிதிஷ் குமாரும் பிஹார் தேர்தலில் இவரை எதிர்த்து முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்ட தேஜஸ்வி யாதவின் தந்தை லாலு பிரசாதும் ஒரு புள்ளியிலிருந்து தான் வருகிறார்கள். ஜனதா கட்சி ஆட்சியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திய கர்ப்பூரி தாக்குர் தான் இவர்கள் இருவருக்கும் ஆதர்சம், ஆலோசகர் எல்லாம்.

ஆனால், இந்தத் தொடக்கம் நிதிஷ் குமாருக்கு தேர்தல் அரசியலில் சாதகமானதாக அமையவில்லை. 1977 மற்றும் 1980 என இரு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் போட்டியிட, இரண்டிலும் சுயேச்சை வேட்பாளர்களிடம் தோல்வியடைந்தார் நிதிஷ் குமார். இந்தத் தோல்விகளால் அரசியலைவிட்டே விலகிவிடலாம் என்ற எண்ணம் நிதிஷ் குமாருக்கு எழுந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், 1985 தான் நிதிஷ் குமாருக்கு தேர்தல் அரசியலில் முதல் திருப்புமுனை!

1985-ல் ஹர்னாட் தொகுதியில் போட்டியிட்ட நிதிஷ் குமார் முதல்முறையாக பிஹார் சட்டப்பேரவைக்குத் தேர்வானார். 1989 வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். 1987-88 காலகட்டத்தில் லோக் தள தலைவராக இருந்தார்.

1989-ல் பார் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திலும் காலடி எடுத்து வைத்தார் நிதிஷ் குமார். வி.பி. சிங் அரசில் வேளாண் துறை மத்திய இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

1991-ல் ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு பார் தொகுதியில் மீண்டும் வெற்றி கண்டார் நிதிஷ் குமார். லாலு பிரசாத் யாதவ் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. நிதிஷ் குமாருக்கான அடுத்த திருப்புமுனை ஏற்பட்ட காலமும் இது தான்.

நேருக்கு நேர்!

லாலு பிரசாத் யாதவின் நிழலில் பயணித்துக் கொண்டிருந்த நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவின் நம்பிக்கைச் சகோதரராக இருந்த நிதிஷ் குமார் 1994-ல் ஜனதா தளக் கட்சியிலிருந்து விலகுகிறார். லாலு பிரசாத் யாதவுக்கு எதிராகப் போர்க்கொடியை உயர்த்தி கட்சியைப் பிளக்கிறார். மூத்த சோஷலிச தலைவர் ஜார்ஜ் ஃபெர்னான்டஸை உடன் வைத்துக்கொண்டு, சமதா கட்சியைத் தொடங்கினார் நிதிஷ் குமார். இதுவே பின்னாளில் ஐக்கிய ஜனதா தளமாக மாறுகிறது. அதாவது, ஜனதா தளத்தைப் பிரித்து வந்தவர்களில் நிதிஷ் குமார் தரப்பினர் தான் ஐக்கிய ஜனதா தளத்தை உருவாக்குகிறார்கள்.

1994-ல் நிதிஷ் குமார் உண்டாக்கிய இந்தப் பிளவு தான், லாலு பிரசாத் யாதவ் vs நிதிஷ் குமார் என்ற திசை நோக்கி பிஹார் அரசியல் களத்தை நகர்த்தியது.

1995 சட்டப்பேரவைத் தேர்தல்

லாலுவை எதிர்த்துக் களம் காண்பது ஒன்றும் அவ்வளவு சாதாரணமானது அல்ல. 1995 சட்டப்பேரவைத் தேர்தலில் சமதா கட்சி 310 இடங்களில் போட்டியிட்டு வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. நிதிஷ் குமார் ஹார்னாட் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். லாலு பிரசாத் யாதவ் மீண்டும் பிஹார் முதல்வரானார். நிதிஷ் குமாருக்கு இது பின்னடைவாகவே அமைந்தது. சட்டப்பேரவைக்கு இரண்டாவது முறையாகத் தேர்வானாலும் நாடாளுமன்றம் மீது நிதிஷ் குமாரின் கவனம் இருந்தது. 1996 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

1996 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கிறது சமதா கட்சி. நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிறார். 1998 மற்றும் 1999 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெறுகிறார். வாஜ்பாய் தலைமையிலான அரசில் ரயில்வே அமைச்சர், வேளாண் துறை அமைச்சர் என மத்திய அமைச்சராக வலம் வந்தார் நிதிஷ் குமார். சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நாடாளுமன்றத்துக்கு வந்தவர், திடீரென பிஹார் முதல்வரானார்.

முதல் முறையாக முதல்வர்!

2000-வது ஆண்டில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டப்பேரவையாக வருகிறது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் 124 இடங்களில் வென்றது. பெரும்பான்மை இல்லை. பாஜகவுடன் கைக்கோர்த்து கூட்டணிக் கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு பிஹார் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் நிதிஷ் குமார். இவர் அப்போது எம்எல்ஏ கூட கிடையாது. ஆனால், இந்த ஆட்சியால் ஒருவார காலத்துக்குக் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நிதிஷ் குமார் தவறிவிட்டார். பிறகு, லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவியே பிஹார் முதல்வராக தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தார்.

முதல்வர் பதவியை இழந்தாலும், மத்தியில் நிதிஷ் குமார் மதிப்புமிக்க தலைவராக வளர்ந்து வந்தார். மத்திய அமைச்சராக இருந்தபோது, பிஹாரிலும் கட்சியை பலப்படுத்திக்கொண்டு வந்தார் நிதிஷ் குமார். இதற்கான அறுவடை தான் 2005 சட்டப்பேரவைத் தேர்தல்.

2005 சட்டப்பேரவைத் தேர்தல்

2005 சட்டப்பேரவைத் தேர்தல் பிஹார் வரலாற்றிலேயே சற்று முக்கியமானத் தேர்தல். காரணம், ஜார்க்கண்ட் மாநிலம் பிஹாரிலிருந்து பிரிந்து சென்ற பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல். 360-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிஹார் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டதாகச் சுருங்கியது.

இந்தத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 75 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அக்டோபரில் மீண்டும் தேர்தல் நடைபெற்றது. இடைப்பட்ட காலத்தில் நிதிஷ் குமார் என்ன மாயஜாலத்தைச் செய்தாரோ தெரியவில்லை. 88 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது அவருடைய ஐக்கிய ஜனதா தளம். பாஜக 55 இடங்களில் வென்றது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் 54 இடங்களில் மட்டுமே வென்றது.

பிஹார் முதல்வரான நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவின் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிஹார் சட்டமேலவை உறுப்பினராகப் பொறுப்பேற்று முதல்வர் பதவியைத் தக்கவைத்தார்.

2010 சட்டப்பேரவைத் தேர்தலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பெரிய வெற்றியைக் கொடுத்தது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 115 இடங்களில் வென்றது. பாஜக 102 இடங்களில் வென்றது.

பெண்களுக்கென்று பிரத்யேகத் திட்டங்களை வைத்து தனக்கான வாக்கு வங்கியாக பெண்களை உருவாக்கியது நிதிஷ் குமாரின் உத்திகளில் மிக முக்கியமானதாகக் குறிப்பிடப்படுகிறது.

மோடியால் வந்த மோதல்!

2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதன் காரணமாக ஜூன் 16, 2013-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான 17 ஆண்டுகால கூட்டணி உறவை முறித்துக் கொண்டார் நிதிஷ் குமார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பிஹாரில் 40 தொகுதிகளில் இரு தொகுதிகளில் மட்டுமே நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது. இதை மிகப் பெரிய தோல்வியாகக் கருதிய நிதிஷ் குமார், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்பதாகச் சொல்லி முதல்வர் பதவியை 2014-ல் ராஜினாமா செய்கிறார்.

இணைந்த கைகள்!

அடுத்த ஓராண்டுக்குள் 2015-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் வந்தது. லாலு பிரசாத் யாதவுடன் கைக்கோர்த்தார் நிதிஷ் குமார். லாலுவும் நிதிஷும் இணைந்து மெகா கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார்கள்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் 80 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதா தளம் 71 தொகுதிகளிலும் வென்றன. பாஜகவால் 53 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

தொடங்கியது நிதிஷின் ஆட்டம்!

2015-ல் மெகா கூட்டணி ஆட்சி உருவானவுடன் பிப்ரவரி 22-ல் முதல்வராகப் பதவியேற்றார் நிதிஷ் குமார். துணை முதல்வராகப் பதவியேற்றார் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ். 2017-ல் தேஜஸ்வி யாதவ் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, மீண்டும் பாஜகவுடன் கூட்டணியை அமைத்துக் கொண்டார். அவரே முதல்வராகத் தொடர்ந்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் மீண்டும் தேர்தல் களம்

2020 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்டார். சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த அதே வேளையில் நிதிஷ் குமார் எதிர்ப்பு நிலைப்பாட்டையும் எடுத்தது. பாஜகவும் நிதிஷ் குமாரும் ஐக்கிய ஜனதா தளத்தில் ஒரே கூட்டணியில் போட்டியிட்டன. ஆனால், நிதிஷ் குமாருக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி அவருடைய மெகா வெற்றியைத் தடுத்தார் சிராக் பாஸ்வான். அதேசமயம், பாஜகவுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தாமல் அக்கட்சியின் வெற்றிக்கு உதவினார்.

மறுபுறம் பிஹாரின் நம்பிக்கை முகமாக தேஜஸ்வி யாதவ் உருவெடுத்து, பெரும் உத்வேகத்துடன் தேர்தலை எதிர்கொண்டார்.

விளைவு, தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 75 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜக 74 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இருந்தபோதிலும், பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராகத் தொடர்ந்தார் நிதிஷ் குமார்.

மீண்டும் தேஜஸ்வி யாதவுடன் கைக்கோர்ப்பு

பிஹாரில் இவருடைய ஆட்சி முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறினார். மீண்டும் தேஜஸ்வியுடன் இணைந்து, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ஆதரவுடன் முதல்வர் பதவியைத் தக்கவைத்தார் நிதிஷ் குமார். தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகச் செயல்பட்டார்.

வெளியேறியது மட்டுமில்லாமல், பாஜகவை எதிர்க்க 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் இண்டியா கூட்டணி உருவாவதற்கான காரணகர்த்தாவாகவும் நிதிஷ் குமார் தான் இருந்தார். இவர் தொடக்கி வைத்த புள்ளி தான் அரசியல் களத்தில் இன்று வரை இண்டியா கூட்டணியாகத் தொடர்கிறது.

ஆனால், என்ன நினைத்தாரோ என்னவோ தலைமை உள்ளிட்ட காரணங்களைக் குறிப்பிட்டு 2024 ஜனவரியில் மெகா கூட்டணியை முறித்துக்கொண்டு மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே இணைந்து கொண்டார் நிதிஷ் குமார். என்ன நடந்தாலும் நான் தான் முதல்வர் என்ற தொனியில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு கம்பீரமாக நடனமாடிக் கொண்டிருந்தார் நிதிஷ் குமார்.

2025-ல் மீண்டும் முதல்வர்!

2025 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்டார். பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன. கடந்த தேர்தலில் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் நடந்த தவறு, இந்தத் தேர்தலில் சரி செய்யப்பட்டது. சிராக் பாஸ்வானைச் சாமர்த்தியமாக உள்ளே கொண்டு வந்தார்கள். இம்முறை நிதிஷ் குமாருக்கு ஆதரவாகவும் சிராக் பாஸ்வான் வாக்குகளை சேகரித்தார்.

மத்தியிலுள்ள பாஜகவும் பிஹாருக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பல லட்சம் கோடிகளில் நிதியை ஒதுக்கி அம்மாநிலத்தில் பெரும் அரசியல் முதலீடுகளைச் செய்தது. மோடி அரசும் நிதிஷ் குமார் அரசும் இணைந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. வாக்காளர்கள் வங்கிக் கணக்குகளில் பணம் சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலானத் திட்டங்களை தடாலடியாக நடைமுறைப்படுத்தினார்கள். தேஜஸ்வியின் வாக்குறுதிகள் எதுவும் எடுபடாத வகையில், அறிவிப்புகளை நடைமுறைப்படுத்தினார்கள். பலன் - கருத்துக் கணிப்புகளால் கூட கணிக்க முடியாத அளவுக்கு 200 தொகுதிகளுக்கும் மேல் மகத்தான வெற்றி.

இம்முறையும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை நிதிஷ் குமார். சட்டமேலவைக்குத் தேர்வாவதன் மூலம் முதல்வர் பதவிக்கானத் தேவையைப் பூர்த்தி செய்துவிடுகிறார் நிதிஷ் குமார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிஹார் முதல்வராகத் தொடர்ந்தவர், மீண்டும் ஒரு முறை முதல்வராக வென்று வந்திருக்கிறார். மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்திருக்கிறார்.

நிதிஷின் ஆட்சி தொடர்கிறது!

Bihar Elections | Nitish Kumar | NDA | BJP | JDU | Tejashwi Yadav | RJD | INDIA Alliance | Mahagatbandhan | Congress | Chirag Paswan | Lok Janashakthi (Ram Vilas) | Jan Suraaj Party | Prashant Kishor | Bihar | Bihar Election | Bihar Election 2025 | Bihar Elections | Bihar Elections 2025 |