இந்தியா

ஒரே விமானத்தில் தில்லிக்குப் பயணம்: நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் பேசியது என்ன?

கிழக்கு நியூஸ்

தில்லிக்கு ஒரே விமானத்தில் பயணித்த நிதிஷ் குமாருடன், வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டதாகவும், நடக்கவிருப்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், பாஜக 240 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், கூட்டணிக் கட்சிகளின் உதவியுடனே பாஜக மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அமைக்கிறது. இண்டியா கூட்டணி ஏறத்தாழ 234 இடங்களில் வென்றுள்ளது.

எனவே, பிஹாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வென்ற 12 இடங்களும், ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் வென்ற 16 இடங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தில்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதிஷ் குமாரும், இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேஜஸ்வி யாதவும் தில்லி புறப்பட்டுள்ளார்கள். இருவரும் ஒரே விமானத்தில் தில்லி சென்றது அரசியல் சூழலில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இருவரும் ஒரே விமானத்தில் பயணித்தது பேசுபொருளானது குறித்து தில்லியில் தேஜஸ்வி யாதவிடம் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையில், "நாங்கள் இருவரும் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டோம். பொறுத்திருந்து நடக்கவிருப்பதைப் பாருங்கள்" என்று தேஜஸ்வி யாதவ் பதிலளித்தார்.