இந்தியா

தேர்தலுக்குப் பிறகு நிதிஷ் குமார் மீண்டும் அணி மாறுவார்: பிரசாந்த் கிஷோர்

"பாஜக தன்னை மீண்டும் முதல்வராக்க விரும்பாது என்பது தெளிவானவுடன், நிதிஷ் குமார்..."

கிழக்கு நியூஸ்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நிதிஷ் குமார் மீண்டும் அணி மாறுவார் என ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பிஹாரில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது. இந்நிலையில், பாஜக கூட்டணியிலுள்ள நிதிஷ் குமார் மீண்டும் அணி மாறுவார் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

பிஹார் மாநிலம் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:

"நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நிதிஷ் குமார் தவிர யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம். இதை நான் எழுதி வேண்டுமானாலும் கொடுக்கத் தயார். நான் கூறியது தவறு என்று நிரூபிக்கப்பட்டால், என் சொந்த அரசியல் இயக்கத்தையே நான் நிறுத்திவிடுகிறேன்.

நிதிஷ் குமார் பாஜக கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிடுவார். 2015-ல் தேர்தல் பிரசாரங்களை நான் கையாண்டபோது தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் அவர் இதைத் தான் செய்துள்ளார்.

தேர்தலுக்குப் பிறகு 5 ஆண்டுகளுக்கு முழுமையாக நிதிஷ் குமார் தான் முதல்வராக நீடிப்பார் என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் உத்தரவாதம் அளிக்க முடியுமா என சவால் விடுக்கிறேன். அவர்கள் அதைச் சொன்னால், அவர்களால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம்.

பாஜக தன்னை மீண்டும் முதல்வராக்க விரும்பாது என்பது தெளிவானவுடன் நிதிஷ் குமார் மீண்டும் அணி மாறுவார்" என்றார் பிரசாந்த் கிஷோர்.