இந்தியா

இண்டியா கூட்டணி நாட்டுக்காகப் பணியாற்றவில்லை: நிதிஷ் குமார்

கிழக்கு நியூஸ்

இண்டியா கூட்டணி ஒருபோதும் நாட்டுக்காகப் பணியாற்றவில்லை என ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார் விமர்சித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.

ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார் இந்தக் கூட்டத்தில் பேசியதாவது:

"இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், அடுத்த முறை தோல்வியடைவார்கள். இதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். அவர்கள் ஒருபோதும் நாட்டுக்காகப் பணியாற்றவில்லை. உங்களுடையத் (பிரதமர் மோடி) தலைமையில் இந்த நாடு வளர்ச்சியடையும்.

பிஹாரில் நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளும் நிறைவு செய்யப்படும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து வந்திருப்பது நல்ல விஷயம். உங்களுக்காக நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். ஞாயிற்றுக்கிழமை பிரதமராகப் பதவியேற்கவுள்ளீர்கள். ஆனால், இன்றே பதவியேற்க வேண்டும் என நான் விரும்புகிறேன். நீங்கள் எப்போது பதவியேற்றுக்கொண்டாலும், நாங்கள் உங்களுடன் துணை நிற்போம். உங்களுடையத் தலைமையின் கீழ் நாம் இணைந்து செயல்படுவோம்" என்றார் நிதிஷ் குமார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமாக 293 இடங்களில் வென்றுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 16 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இண்டியா கூட்டணி உருவாவதற்கு மிக முக்கியக் காரணியாக இருந்து, பிறகு கூட்டணி மாறியவர் நிதிஷ் குமார்.